பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால் பொருட்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

*புதுகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுக்கோட்டை : பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால் நீதிமன்றம் உத்தரவுபடி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த 94ம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்கு பழனிவேல் என்பவரிடமிருந்து 4 ஏக்கர் 98 சென்ட் நிலம் பெறப்பட்டது. ஒரு சென்ட் 118 ரூபாய்க்கு அரசு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இழப்பீடாக 86 ஆயிரத்து 72 ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதாது, கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், ஒரு சென்ட் 700 ரூபாய் என நிர்ணயம் செய்து அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அரசு சார்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு சென்ட் 2000 ரூபாய் விலை நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்ட நபருக்கு கடந்த 2021ம் ஆண்டு வழங்கப்பட்டது.இதில் மீதமுள்ள தொகை 19 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடு வழங்காத காரணத்தால் மீண்டும் பாதிக்கப்பட்ட நபர், புதுக்கோட்டை சப்-கோர்ட்டில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து 19 லட்சம் ரூபாய் மட்டுமல்லாமல் அதற்கான வட்டி தொகையும் சேர்த்து மொத்தம் 31 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தின் அசையும் சொத்துக்களான டேபிள், மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்டவை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மற்றும் கோர்ட் அமினா, ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நேற்று மாலை வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாத காலத்திற்குள் நீதிமன்ற உத்தரவுப்படி தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது