இயற்கையை நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு போட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது’ என்று அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தை சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக ஒன்றிய அரசே அறிவித்திருக்கிறது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்பட்டது அழிவு என்றால், என்.எல்.சியால் நிகழ்ந்து கொண்டிருப்பது பேரழிவு ஆகும். இது தடுக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி… என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும். மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் எவையாக இருந்தாலும் அவை மூடப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும் என்.எல்.சிக்கும் பொருந்தும். எனவே, இனியும் தாமதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்தை மூட தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி