தமிழகத்தில் ரூ.13,003.16 கோடி முதலீடு செய்து 5 மாதத்தில் 1,677 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

தாம்பரம்: பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசுகையில், ‘‘உலக முதலீட்டாளர் மாநாட்டில் எம்எஸ்எம் துறைக்கு எவ்வளவு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. எவ்வளவு தொழிற்சாலைகள் வந்தது என்ற விவரங்களை அளிக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி, 8ம் தேதி உலக முதலீட்டாளர் மாநாடு மிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடந்தது.

மாநாட்டில் 5,068 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 63,573.11 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கக்கூடிய அளவிற்கு இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்மூலமாக 2,50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த 5 மாதங்களில் 1,677 நிறுவனங்கள் 13,003.16 கோடி ரூபாய் முதலீடு செய்து உற்பத்தியை துவங்கி இருக்கிறது.

இதன்மூலமாக 46,000 பேருக்கு இப்போதுவரை வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு மாவட்ட அளவில் ஒரு குழு அமைத்திருக்கிறோம். ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்ற நிறுவனங்களையெல்லாம் அழைத்துப்பேசி, குறுகிய காலத்தில் அந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அரசு செய்யும்,’’ என்றார்.

Related posts

ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி இடையே குண்டும், குழியுமான இணைப்பு சாலை: சீரமைக்க கோரிக்கை

ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் டாஸ்லிங் டைமண்ட் திருவிழா: சிறப்பு சலுகை விற்பனை

ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வீஏஓ அலுவலகத்தில் லாரி புகுந்து விபத்து: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு