தொடர்ந்து 4வது மாதமாக சரிந்தது வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைப்பு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சமையல் சிலிண்டரை பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200ம், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.100ம் என அடுத்தடுத்து ரூ.300 விலை குறைக்கப்பட்டது. அதன்பின்னர், கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் விலையில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான புதிய விலை பட்டியலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று காலை வெளியிட்டது. அதன்படி தொடர்ச்சியாக 4வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால்,சென்னையில் ரூ.818.50, சேலத்தில் ரூ.836.50, டெல்லியில் ரூ.803, மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829 என பழைய விலையிலேயே நீடிக்கிறது.

அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரலில் ரூ.30.50, மே- ரூ.19, ஜூன் ரூ.70.05 என விலை குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.31 குறைக்கப்பட்டது. நடப்பாண்டு கடந்த 4 மாதமாக வர்த்தக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.1,809.50 ஆகவும், சேலத்தில் ரூ.1,758 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.155.55 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால், இவ்விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்

டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை