வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.30.50 குறைப்பு: சென்னையில் ரூ.1930 ஆக நிர்ணயம்

சேலம்: வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,930 ஆகவும், சேலத்தில் ரூ.1,878.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால், கடந்தாண்டு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி மகளிர் தினத்தன்று வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஏப்ரல்) புதிய விலை பட்டியலை நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது. அதில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்ட விலையே நீடிப்பதாக தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.23.50 அதிகரிக்கப்பட்டது. நடப்பு மாதத்தில் நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டது. கடந்த மாதம் சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக இருந்த நிலையில் ரூ.30.50 குறைக்கப்பட்டதால் ரூ.1930 ஆகவும், சேலத்தில் ரூ.1,909ல் இருந்து ரூ.1,878.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு