44.58 கோடி மதிப்பீட்டில் பொன்னை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம்: நவம்பர் மாதம் செயல்பட தொடங்கும், பேரவையில் அமைச்சர் கேஎன்நேரு தகவல்

சென்னை: பொன்னை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் சந்திரன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கேஎன் நேரு பதில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் பேசுகையில், திருத்தணி தொகுதி இரா.கி.பேட்டை வட்டத்திற்கு பொன்னை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முன்வருமா?. இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ” திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் இரா.கி.பேட்டை ஒன்றியத்தைச் சார்ந்த 38 ஊராட்சிகளில் 287 குடியிருப்புகள் உள்ளன.

திருத்தணி மற்றும் இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய 9 ஊராட்சிகளில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு, பொன்னை ஆற்றிலிருந்து குடிநீர் வழங்க விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நீர் ஆதாரம் இல்லாததால் கொசஸ்தலை ஆற்றிலிருந்து குடிநீர் வழங்க உத்தேசிக்கப்பட்டு, ரூ.44.58 கோடி மதிப்பீட்டில் உயிர் நீர் இயக்கத்தின் (ஜல் ஜீவன் இயக்கம்) கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 15 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2024-ல் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக் கொண்டுவர இலக்கிடப்பட்டுள்ளது.

எஸ்.சந்திரன்: இந்தத் திட்டத்தினைப் சிறப்பாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கக்கூடிய தமிழ்நாடு முதல்வருக்கும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருக்கும் என்னுடைய சட்டமன்றத் தொகுதியின் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நடப்புத் திட்டத்திலே மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டிகளின் எண்ணிக்கை 47 செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களிலே இருக்கக் கூடிய குடிநீர் இணைப்பினை பயன்படுத்தி அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

கூடுதலாக சில இடங்களிலே பைப்லைன் விஸ்தரிப்பு தேவைப்படுவதால் அதனை அமைத்துத்தர அமைச்சர் முன்வர வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: ஒரு குடிநீர் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, எந்த இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட வேண்டும் என்பதை முடிவு செய்திருப்பார்கள். நகரங்கள் என்ற காரணத்தால் நாள்தோறும் விரிவடைகின்ற காரணத்தால் தேவைப்படுகின்ற இடங்களிலே பின்னாளில் அந்த இடத்தில் தொட்டி கட்டப்படும் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தரையிலே கட்டி சம்ப் ஆக இருந்தாலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியாக இருந்தாலும் தேவைப்படுகின்றபோது அதைக் கட்டி அனைத்து மக்களுக்கும் சீராக குடிநீர் விநியோகம் என்ற வகையிலே தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். எஸ்.சந்திரன்: இந்தத் திட்டத்தின்கீழ் அருகாமையிலே இருக்கக்கூடிய ஒருசில கிராமங்கள் விடுபட்டுப் போய் இருக்கின்றன. அம்மையார்குப்பம், ஆதிவராகபுரம், கே..ஜி.கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள். அதனை இந்தத் திட்டத்திலே சேர்த்துத் தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

* 50 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்
இத்திட்டத்தின்மூலம் 53,630 மக்கள் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு 2.95 எம்எல்டி குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், திருத்தணி தொகுதி இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தினைச் சார்ந்த 4 ஊராட்சிகளிலுள்ள இரா.கி.பேட்டை, வங்கனூர், ஐ.சி.எஸ்.கண்டிகை மற்றும் எஸ்.வி.ஜி.புரம் 57 குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 ஊராட்சியில் உள்ள 200 குடியிருப்புகளுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலம் தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கேஎன் நேரு பேரவையில் தெரிவித்துள்ளார்.

Related posts

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!