வண்ணங்களும் எண்ணங்களும்

வண்ணங்கள் வழியே ராசிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வோம். அந்த வண்ணங்கள் என்ன செய்யும் என்பதை விரிவாக காண்போம். வண்ணங்கள் ராசியுடன் இரண்டற கலந்துள்ளதால் அதற்கேற்ற வண்ணம் வாழ்வில் நன்மை செய்யும் அதையும் கவனமாக கருத்தில் கொண்டு சில வண்ணங்களை உபயோகித்தும் சில வண்ணங்களை தவிர்த்தும் காலத்திற்கேற்றவாறு (கோட்சாரத்திற்கு தகுந்த வண்ணம்) நீங்கள் சில விஷயங்களை சிந்தித்தால் நீங்களும் ஒரு வெற்றியாளரே…

ரிஷபம்: காலபுருஷனின் இரண்டாம் வீடாக வருகிறது. இரண்டாம் வீட்டை பொதுவாக தனஸ்தானம் என்பர். காலபுருஷனின் தனாதிபதி சுக்கிரனாக உள்ளார். இந்த சுக்கிரனுக்கு உகந்த வண்ணம் இளம்சிவப்பு அதாவது பிங்க் நிற வண்ணம். மேஷத்திற்கு அருகில் இருப்பதனால் இந்த வண்ணத்தை இந்த ராசி பெற்றிருக்கும். உங்கள் ராசி நாதன் பிங்க் என்ற இளஞ்சிவப்பு நிறத்தை கொண்டாலும் அவரே துலாம் ராசியின் அதிபதியாகவும் உள்ளார். ஆகவே, இளஞ்சிவப்பு நிறம் சாதகப் பலன்களையும் பாதகப் பலன்களையும் கொண்ட ஆற்றலாக உள்ளது என்பதால் கோட்சாரத்தில் துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலத்தில் இளஞ் சிவப்பு நிறம் பயன்படுத்துவதை தவிர்ப்பது சாலச் சிறந்தது.

உங்களின் பாக்கியநாதனாக சனி பகவான் உள்ளார். அவரே உங்கள் ராசி நாதனுக்கு நட்பாக உள்ளதால் நிச்சயம் நற்பலன்களை வாரி வழங்கும் வள்ளலாக உள்ளார். சனி பகவான் ஒன்பதாம் (9ம்) பத்தாம் வீட்டிற்கு உரிய நாதன் என்பதால் தொழிலில் சிறப்படையச் செய்வார். ஆனால், நேர்மை முக்கியம். நீங்கள் தொழில் சார்ந்த தொடர்புகளிலும் அதன் விஷயங்கள் அடிப்படையிலும் கருநீலம் அல்லது நீல வண்ணத்தை பயன்படுத்துவதால் முன்னேற்றம் உண்டாக்கும்.

ரிஷப ராசிக்கு எட்டாம் (8ம்) வீடாக தனுர் ராசியும் பதினொன்றாம் வீடாக மீன ராசியும் அமைகிறது. வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கும் காலத்தில் இடர்பாடுகளை கடந்து வெற்றியை உறுதி செய்வீர்கள் என்பது உறுதி. மஞ்சள் நிற வண்ணத்தை கொஞ்சம் தவிர்த்தல் நலம் பயக்கும். கோட்சாரத்தில் குரு பகவான் மீனத்தை நோக்கி பயணிக்கும் போதோ அல்லது மீன ராசியில் அமரும் போதோ அல்லது மீன ராசிக்கு நெருக்கமாக இருக்கும் போதோ மஞ்சள் நிற வண்ணம் உங்களுக்கு கை கொடுக்கும். மற்ற நேரங்களில் நீங்கள் மஞ்சள் நிற வண்ணத்தை தவிர்த்தல் நலம் பயக்கும்.

உங்களின் ராசிக்கு பச்சை வண்ணம் பொதுவாக எல்லாவற்றிற்கும் பச்சை கொடி காட்டிக் கொண்டே இருக்கும். ஏனெனில், தன ஸ்தான அதிபதி (2ம்) மற்றும் பூர்வ புண்ணியம் என சொல்லக் கூடிய ஐந்தாம் அதிபதியாக (5ம்) இருப்பதால் நற்பலன்கள் உண்டாக்கும். உங்கள் ராசிக்கு கேந்திரம் என சொல்லக்கூடிய சிம்மம் (4ம்), விருச்சிகம் (7ம்) கும்பம் (10ம்) வீடு உங்களை இயக்கும். இதில், கும்பம் மற்றும் விருச்சிகம் ராசி நாதன்கள் பகைவர்களாக உள்ளதால் கோட்சாரத்தில் இந்த கிரகங்கள் வலிமையாக இருக்கும் போது சிவப்பு மற்றும் நீலம் வண்ணத்தை கவனமாக கையாளுங்கள். போராட்டத்திற்கு பிறகு வெற்றி உங்களை நோக்கியே திரும்பும்.

இக்காலகட்டத்தில் மணி ஒன்றை வாங்கி அதில், நீலம் மற்றும் சிவப்பு வண்ணத்தை இணைத்து ஐயப்பன் கோயிலில் கட்டிவிடுங்கள். உங்களின் போராட்டம் உங்களுக்கு சாதகமாக மாறும். இப்பொழுது கோட்சாரத்திலும் இதே சூழ்நிலை உள்ளதால் நீங்கள் இந்த தாந்தீரிக பரிகாரத்தை செய்தால் இறுக்கமான சூழ்நிலை விலகி நன்மை உண்டாக்கும்.

வறுமையின் கோரப்பிடியில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்கள் தீமைகள் விலகி நன்மை உண்டாக்கும். உங்கள் பாக்கியநாதன் உங்களை ஆசிர்வதிப்பார். வண்ணங்கள் கிரகங்களுடனும் கிரகங்கள் வண்ணங்களுடனும் பயணிப்பது தவிர்க்க முடியாத ஒன்று அவ்வாறு தவிர்க்க முடியாத வண்ணங்களை நாமும் தவிர்க்காமல் முைறயாக அறிந்து அதற்கு தகுந்தவாறு பயன்படுத்தினால் தவிர்க்க முடியாத நேர்மறை பலன்கள் உண்டாகும்.

தொகுப்பு: சிவகணேசன்

Related posts

திருமண பந்தமும் ஜோதிடமும்

துலாம் ராசியினரின் உடல் நோயும் தீர்வும்

அட்சய கோட்சாரம்