வண்ண வண்ண கேண்டி… வகை வகையான கேண்டி!

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்ற பாடல் கேட்டிருப்போம். அப்படி செல்பவர்கள் கவிதையை அங்கிருந்து வாங்கி வருகிறார்களோ இல்லையோ கையில் ஒரு கேண்டியைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். இத்தகைய அனைவரும் விரும்பும் கேண்டியை எந்தவொரு கெமிக்கலும் சேர்க்காமல் தரமாகவும், பல்வேறு வெரைட்டிகளிலும் கொடுத்து வருகிறது சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கேண்டி கிளவுட் ரெஸ்டாரென்ட். சிட்டி சென்டரில் இருந்து உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும் இந்த கேண்டி கிளவுடில் கிடைக்கும் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இதன் உரிமையாளர்களான குணால் மற்றும் ஜீரனைச் சந்திப்பதற்காக சென்றிருந்தோம். உணவகத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புற வடிவமைப்பே அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. வெளியில் இருந்து பார்க்கும்போதே இந்தக் கடைக்குள் சென்றுவர வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

பிங்க் நிறத்தில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கடையின் தோற்றமும், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும், ஆங்காங்கே தொங்கும் பச்சை நிறச் செடிகளும் உண்மையிலேயே நமக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இத்தகைய சூழலில் தங்கள்உணவகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஜீரன். “அப்பா, அம்மா காலத்திலேயே ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டோம். நாங்கள் குடும்பத்தோடு சென்னைக்கு வந்து 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை தற்போது எங்களுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சென்னையில் பி.டெக் ஐடி வரை படித்தேன். இதையடுத்து பெங்களூரில் இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். சென்னையைப் போலவே பெங்களூரும் மிகப்பெரிய ஒரு பெரிய சிட்டி. திரும்பும் இடமெல்லாம் பல தரப்பட்ட மக்களும், பரபரப்பாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக நாங்கள் இருந்த கோரமங்களாவில் திரும்பும் இடமெல்லாம் கடைகளும் மார்க்கெட்டுகளும் நிரம்பி இருக்கும்.

அங்குதான் எதேச்சையாக ஒரு கேண்டி கடைக்கு சென்றிருந்தேன். கடையின் இண்டீரியரும், எக்ஸ்டீரியரும் அத்தனை அழகாக இருந்தது. கடையின் உள்ளே சென்றதும் எப்போதும் போல மெனுகார்டை எடுத்து ஒரு கேண்டியை ஆர்டர் செய்தேன். பஞ்சுமிட்டாயில் இப்படி எல்லாம் ஒரு டிஷ்ஷைக் கொடுக்க முடியுமா? என்ற கேள்விதான் எனக்குள் எழுந்தது. உண்மையிலேயே கேண்டி சாப்பிடுவதற்கு தரமான ஒரு பெஸ்ட் ஸ்பாட்தான் அது. இதேபோல் ஒரு கேண்டிக் கடையை நமது சென்னையில் துவங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கோரமங்களா, எம்ஜிஎம் சாலையில் இருக்கும் அனைத்து கேண்டி கடைகளிலும் ஏறி இறங்கி எந்தவொரு கெமிக்கலும் இல்லாமல் எப்படி ஒரு கேண்டியை தயார் செய்வது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கொரோனாவிற்கு முன்பே கேண்டி க்ளவுடை தொடங்குவதற்கு உண்டான வேலைகளில் இறங்கிவிட்டேன். அந்த நேரத்தில்தான் கொரோனா வந்துவிட்டது. பின்னர் நான் முழுவதுமாக பெங்களூரில் இருந்து வெக்கேட் செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு உணவகத்தை எப்படி டிசைன் செய்வது? எந்த மாதிரியான வண்ணம் கொடுப்பது? என்ன மாதிரியான ஓவியங்கள் வரையலாம்? என்பது பற்றி என்னுடைய அண்ணன் குணாலிடம் ஆலோசனை செய்தேன்.

இந்த ப்ராஸசுக்கு மட்டுமே மூன்று வருடங்கள் ஆனது. பல திட்டமிடல்களுடன் 2023ம் ஆண்டின் துவக்கத்தில் இந்த உணவகத்தைத் தொடங்கினேன். மேகம்போல பஞ்சுமிட்டாய் இருப்பதாலும், அதோடு மிட்டாய்கள் மற்றும் ஐஸ்க்ரீம்கள் சேர்த்துக் கொடுப்பதாலும் உணவகத்திற்கு கேண்டி க்ளவுட் என்று பெயர் வைத்தேன். கலர்கலரான கேண்டிகளும், யாரும் சாப்பிடாத வித்தியாசமான காம்பினேஷன் டிஷ்களும் வாடிக்கையாளர்களை உணவகத்திற்கு தானாகவே இழுத்து வந்துவிடும். கிட்டத்தட்ட எண்பது வகையான கேண்டியை வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு கெமிக்கலும் இல்லாமல் தயார் செய்து கொடுத்து வருகிறோம். மினி பான்கேக்ஸ், வப்பல்ஸ், ப்ரீக் ஷேக், பப்புல் டீ, திக் ஷேக், வாப்பல் பாப்ஸ், ஸ்கூப் கப்ஸ், ஐஸ்க்ரீம் ஜார், எக்ஸ்ட்ராவகண்ட் ஷண்ட்டேஸ், க்ளாசிக் சன்டே என பல வெரைட்டியில் வித்தியாசமான கேண்டி கொடுத்து வருகிறேன். இதில் ஃப்ரூட் லூப் சன்டே, கேர்மெல் க்ளவுடு சன்டே, சர்ரொ சன்டே, பீச் மெல்பா சன்டே, அல்டிமேட் பனானா ஸ்பிலிட், ஓரியோ திக் ஷேக், காபி ப்ளாஸ்ட் திக் ஷேக், பெர்ரேரோ திக் ஷேக் என பல ஃப்ளேவர்கள் எங்களிடம் உள்ளன. வஃப்ளஸில் டே அண்ட் நைட், க்ளாசிக் பெல்ஜியன், யுனிக்கார்ன் இருக்கிறது.

எங்களின் சிக்னேச்சர் கேண்டி மட்டும் கிட்கேட் வஃப்ள், க்ளாசிக் அமெரிக்கன், பெர்ரேரோ நட்டல்லா, ப்ரவுனி அட்டாக், யுனிகான் பேன் கேக், ரெட் வெல்வெட் பேன் கேக், பார்பீக்யூ ஹஸ் ப்ரவுன் பர்கர், க்ரிஸ்பி வெஜ் பர்கர், சாக்லெட் பார்ட்டி ரெயின்போ, சால்டேட்கேர்மெல் பாப், சீஸ்ஸி லோடே நாச்சோஸ் என்று முப்பதுக்கும் மேல் இருக்கிறது. இந்த வெரைட்டி கேண்டி, காட்டன் கேண்டிகள் சென்னையில் வேறு எங்குமே கிடைக்காது. மெரினா பீச்சுக்கு செல்பவர்கள், திரும்பி வருபவர்கள் என நிறைய பேர் க்ளவுட் கேண்டிக்கு வந்து செல்கிறார்கள். அப்படி வருபவர்களில் தங்களுடைய டின்னரை முடித்துவிட்டு வேறெங்காவது வெளியில் செல்வார்கள். அவர்களுக்காகவே பாஸ்தா, பர்கர், பீட்சாவும் நாங்கள் தயார் செய்து கொடுத்து வருகிறோம். பீட்சாவில் ஆனியன் அண்ட் கேப்சிகம் பீட்சா, கார்ன் சீஸ் பீட்சா, மேர்கிரிட்டா பீட்சா, வெஜ் பீட்சா, பெர்ரி பெர்ரி பனீர் பீட்சா தருகிறோம். சாண்ட்விச்சிலும் கார்லிக் ப்ரட், மெக்சிகன் க்ரில்டு சீஸ், சில்லி சீஸ் டோஸ்ட், வெஜ் க்ளப் சாண்ட்விச், நட்டெல்லா சாண்ட்விச் உள்ளது.

நட்டெல்லா பிஷ்காப்பை அனைவரும் விரும்பி சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்த டிஷ்ஷின் ப்ரிப்பரேஷந்தான். இந்த டிஷ் காட்டன் கேண்டி, ஐஸ்க்ரீம், சின்ன கேண்டி, பிஷ்காப் கலந்த கலவையாக இருக்கும். காட்டன் கேண்டியை ஒரு ரோல் போல் சுற்றி பாதி ரோலாக கட் செய்துவிடுவோம். இந்த கட் செய்த கேண்டியின் நடுவே பிஷ்காப்பை தூவுவோம். அதற்கு மேல் சாக்லெட் ஃப்ளேவரில் இருக்கும் ஐஸ்க்ரீமை வைத்து சிறிய சிறிய சாக்லெட்டை் தூவி கொஞ்சம் சாக்லெட் சாசைத் தடவிக் கொடுப்போம். இந்த டி‌ஷ் பார்ப்பதற்கு மட்டும் கிடையாது. சுவைப்பதற்கும் அருமையாக இருக்கும். ஸ்ட்ராபெர்ரி பப்புல்கம் கேண்டி ஒன்றைக் கொடுத்து கொண்டு இருக்கிறோம். இதனைச் சாப்பிடும் போது ஸ்ட்ராபெர்ரி ஃப்ளேவரும் பப்பில்கம் ஃப்ளேவரும் நமக்கு தெளிவாக தெரியும். பாஸ்தா மற்றும் பீட்சாவில் நாங்கள் கலக்கும் மசாலாக்கள் அனைத்தும் தனித்துவமாக இருக்கும். இதற்காகவே நிறைய வாடிக்கையாளர்கள் எங்களது கிளவுட் கேண்டியைத் தேடி வருகிறார்கள்’’ என்கிறார்.

Related posts

தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன