கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கூறி வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்: சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலம் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் கல்லூரியின் முதல்வராக பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் சில வருடங்களாக கல்லூரியில் படிக்கும் மாணவிகள், பணியாற்றி வரும் பேராசிரியர்கள், ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகள் மற்றும் இதர பெண் பணியாளர்களிடம், பாலியல் தொந்தரவுகள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சமீபத்தில் கல்லூரி நிர்வாகத்தினருக்கு புகார் சென்றது. அதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம், தன்னை முதல்வர் பணியில் இருந்து விடுவிக்குமாறு நிர்வாகத்திற்கு பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி ஜனவரி 24ம் தேதி முதல்வர் பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் 2 வாரங்களுக்கு முன் தர்மபுரி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்திச் சென்றார். இந்நிலையில் பாலாஜி தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார். இதனிடையே மெமோ மற்றும் பணியில் மீண்டும் சேர்வது தொடர்பாக இன்று பேசுவதற்கு அவர் கல்லூரிக்கு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கல்லூரி நுழைவுவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முன்னாள் முதல்வர் பாலாஜிக்கு எதிராகவும், அவரை கைது செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி பேராசிரியர்கள் கூறுகையில், கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். குறிப்பாக இரட்டை அர்த்தவசனங்களுடன் பேசு வதுடன், தனக்கு பிடித்தமானவர்களிடம் அவரே சென்று பேசுவார். தற்போது அவர் மீது பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் கல்லூரிக்கு வந்துள்ளார். அவரை மீண்டும் கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி