திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் தியகராஜர் பொறியியல் கல்லூரியில் கம்பராமாயணம் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பரிசுகள் வழங்கிப் பேசினார். அவர் தன் உரையை நிறைவு செய்யும்போது ‘ஜெய்ஸ்ரீராம்’ என 3 முறை குரல் எழுப்பினார். அப்போது, அங்கிருந்த மாணவர்களும் `ஜெய்ஸ்ரீராம்’ எனக் கூறினர். ஆளுநர் பதவியில் இருப்பவர் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த முழக்கத்தை எழுப்பி, அதை மாணவர்களையும் கூறச்செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கம்பன் விழாவுக்கு விடுமுறை நாளில் மாணவர்கள், ஆசிரியர்களை வரவழைத்து, கட்டாயப்படுத்தி விழா அரங்கில் அமரவைத்தனர். செல்போன் அனுமதிக்கவில்லை. பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை குடிநீர், ஸ்நாக்ஸ் என ஏதும் இல்லாமலும், இயற்கை உபாதை கழிக்கக்கூட செல்ல முடியாதவாறும் மாணவர்கள், ஆசிரியர்களை கொடுமைப்படுத்தினர். மேலும், திராவிட இயக்க கருத்தியலுக்கு எதிராகவும், வகுப்பு வாதத்தை தூண்டும் வகையிலும், மக்களை பிளவுபடுத்தும் சனாதனத்தை வலியுறுத்தியும் ஆளுநர் பேசியுள்ளார்.
நிகழ்ச்சி முடிவில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் கட்டாயப்படுத்தி `ஜெய்ராம்’ என கோஷமிட வைத்துள்ளார். இதற்காக ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


