கலெக்டர்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் ஆகிய 2 வட்டங்களிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, அணைகளிலிருந்து உபரிநீரை வெளியேற்ற நீர் வள ஆதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து தீர்வு காணும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு