கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் மூதாட்டி தர்ணா போராட்டம்

*சொத்துக்களை அபகரித்ததாக மகன் மீது புகார்

சேலம் : சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மகன் மீது நடவடிக்கை கோரி மகளுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி (64) மற்றும் அவரது மகள் பூங்கொடி (38) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக போர்டிகோவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாப்பாத்தி கூறுகையில், ‘‘எனது கணவர் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவருக்கு சொந்தமாக 3 மாடி வீடு, கடைகள் மற்றும் தறி கூடம் ஆகியவை உள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். இந்நிலையில் எனது மகன் மற்றும் அவரது மனைவி கூட்டாக சேர்ந்துகொண்டு, போலியாக ஆவணங்களை தயாரித்து அனைத்து சொத்தையும் அபகரித்துக் கொண்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தகாத வார்த்தையால் திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். இதனால் விவகாரத்து பெற்று என்னுடன் வசித்து வரும் மகள் பூங்கொடி, அவரது குழந்தை என நாங்கள் வாழ வழி இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே எனது மகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சொத்துக்களை மீட்டு தர வேண்டும்,’’ என்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு