26 பெரிய நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரி வசூலிக்க தவறிய விவகாரம் மாவட்ட கலெக்டர் பதில் தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பஞ்சாயத்து யூனியனில் உள்ள தொடுக்காடு பஞ்சாயத்தின் தலைவர் பி.வெங்கடேசன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் தொடுக்காடு பஞ்சாயதிற்கு உட்பட்ட பகுதியில் 26க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த நிறுவனங்கள் சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள் என பஞ்சாயத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானத்தை இந்த நிறுவனங்கள் ஈட்டுகின்றன. ஆனால், பஞ்சாயத்திற்கு இந்த நிறுவனங்கள் சொத்துவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தவில்லை. எனவே, இந்த நிறுவனங்கள் தொடுக்காடு பஞ்சாயத்துக்கு தரவேண்டிய வரிகளை வசூலிக்க வருவாய் வசூல் அதிகாரியை நியமனம் செய்யுமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் தரப்பில் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரியை செலுத்தவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்கலாம் என்று கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, பஞ்சாயத்துக்கு தலைவர் வெங்கடேசன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் ஆஜராகி நீதிமன்ற உத்தரவை கலெக்டர் செயல்படுத்தவில்லை, என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தரப்பு பதில் தருமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்