கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் தீவிரம்: நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் கடந்த சில மாதம் முன் துவங்கியது. மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.40 கி.மீ தூரத்திற்கு 3 கட்டங்களாக இப்பணி நடக்கிறது. இச்சாலை, 4 வழிப்பாதையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது 21 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. மதுக்கரை மைல்கல் முதல் சிறுவாணி ரோடு செல்லப்பகவுண்டன்பாளையம் வரை இந்த பணிகள் நடக்கிறது. 28 இடத்தில் மழை நீர் வடிகால் பாலம் மற்றும் 13 இடத்தில் சிறு பாலம் கட்டும் பணி நடக்கிறது.

இதில், வடிகால் பணிகள் 20 இடத்தில் முடிவு பெற்றது. சிறுபாலம் 2 இடத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சர்வே செய்யப்பட்ட பகுதியில் மண் சமன் செய்யப்பட்டு, தார் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தார் தளம் நிறைவு பெற்றுள்ளது. இந்த பணிகளை, தமிழக அரிசன் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் (கட்டுமானம், பராமரிப்பு) நேற்று ஆய்வு செய்தார். அவர், பணி நடக்கும் இடங்களில் மழைநீர் வடிகால் செல்லும் பகுதி, வன எல்லையோரமாக இருப்பதால் அந்த பகுதியில் சாலை பாதுகாப்பு அம்சங்கள், பாலங்களின் தாங்கு திறன் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், கிராம பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு வருவதால் வாகனங்கள் எந்த இடத்திலும் தடையின்றி சென்று வர முடியும் எனவும் ஆய்வு செய்தார். இச்சாலை, முழுக்க முழுக்க புறநகர் பகுதிகளில் அமைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விறு விறுப்பாக நடக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பணிகள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்தக்கட்டமாக 12.8 கி.மீ தூரத்திற்கு இச்சாலை பணி துவக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இச்சாலை அமைக்க 70 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் நிலமும் கையகப்படுத்தப்பட்ட பின்னர் பணிகள் விறு விறுவென துவக்கப்படும், இந்த இரண்டாம் கட்ட சாலைப்பணிகளுக்கு சுமார் 260 கோடி ரூபாய் செலவாகும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.

இதற்கான மதிப்பீடு தயாரித்து டெண்டர் விட்டு விரைவில் பணி துவக்கப்பட உள்ளது. அடுத்ததாக, 3ம் கட்ட சாலை பணிகளுக்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது. இச்சாலை பணி முழுமை அடைந்ததும், பாலக்காடு சாலை, மதுக்கரை, வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் கோவைப்புதூர், பேரூர், ஆலாந்துறை, மாதம்பட்டி, சிறுவாணி, தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி பகுதிக்கு விரைவாக சென்று வர முடியும். மேலும் இரண்டாம், மூன்றாம் கட்ட பைபாஸ் ரோடு அமைக்கப்படும்போது தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மார்க்கமாக செல்லும் வாகனங்களின் பயணம் எளிதாகும். இதர பகுதிகளுக்கும் இந்த பைபாஸ் ரோடு உதவிகரமாக இருக்கும். இந்த ஆய்வின்போது, கோவை கோட்ட நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, ஜேம்ஸ் மார்ட்டின் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்