கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் ரூ..30,000 திருட்டு

கோவை: கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் டேப் ஒட்டி நூதன முறையில் ரூ.30,000ஐ மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். கோவை, அவினாசி உள்பட இடங்களில் 5 ஏடிஎம் மையங்களில் இதேபோல் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த வாடிக்கையாளர்களுக்கு பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வரவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகியபோது பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உள்ளே புகுந்த 2 நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தில்பணம் வரக்கூடிய பகுதியில் டேப் ஒட்டிவிட்டு வெளியே வந்துள்ளனர். பின்னர் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முயன்றபோது வெளியே வராமல் இருந்துள்ளது. இதையடுத்து ஏடிஎம் மையத்தில் மீண்டும் புகுந்த நபர்கள் பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

இந்த காட்சிகளை கண்ட வங்கியின் மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையின்போது கோவை மாவட்டம் பெரியக்கடை வீதி பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரம் உள்ளிட்ட 5 ஏடிஎம் மையங்களில் இதே முறையை பயன்படுத்தி அந்த 2 நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். முதற்கட்டமாக குனியமுத்தூர் பெரியக்கடை வீதி பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களை கைது செய்து விடுவோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைப்பெரியாறு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை அக்.9க்கு ஒத்திவைப்பு

சிவாஜி கணேசன் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் முதல்வர்

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மட்டும் தள்ளுபடியா?.. ராகுல் காந்தி கண்டனம்