கோவை தனியார் இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் மாணவருக்கு மொட்டையடித்து ஆபாச வீடியோ எடுத்து ராகிங்: 7 மாணவர்கள் கைது; அதிரடி சஸ்பெண்ட்

கோவை: கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் ஜூனியர் மாணவருக்கு மொட்டையடித்து, ஆபாச வீடியோ எடுத்து ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக கல்லூரியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கோவை அவினாசி ரோடு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கி படிக்க கல்லூரி வளாகத்துக்குள் தனித்தனி விடுதி வசதியும் உள்ளது. இந்த கல்லூரியில் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 18 வயது மாணவர் 2ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவரின் பெற்றோர் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த மாணவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். கடந்த 6ம் தேதி இரவு அந்த மாணவர் அறையில் இருந்தார். அப்போது அதே விடுதியில் தங்கி படித்து வரும் சில மாணவர்கள் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். அவர் தர மறுக்கவே கோபமடைந்த அவர்கள், யாரும் இல்லாத மற்றொரு அறைக்கு அந்த மாணவரை அழைத்து சென்று பணம் தராவிட்டால் உன் அறைக்கு போக விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர். அவர் பணமில்லை எனக்கூறியதால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. மேலும் தாங்கள் வைத்திருந்த டிரிம்மர் மூலம் அந்த மாணவரின் தலையை மொட்டை அடித்தனர். மாணவரை நிர்வாணமாக நிற்க வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். ‘‘இந்த வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம். நாங்கள் கேட்கும் பணத்தை நீ தராமல் இங்கேயிருந்து செல்ல முடியாது’’ என தொடர்ந்து மிரட்டியுள்ளனர். அந்த மாணவர் கண்ணீர்விட்டு கதறி அவர்களிடம் கெஞ்சியுள்ளார். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் உனக்கு சூப்பர் சீனியர்கள். எங்கள் பேச்சு கேட்காமல் நீ ஹாஸ்டலில் தங்க முடியாது. யாரிடம் போய் புகார் செய்தாலும் எங்களை எதுவும் செய்ய முடியாது’’ எனக்கூறி விடிய விடிய தொல்லை கொடுத்துள்ளனர்.

விடிய விடிய தொந்தரவு செய்த அவர்கள் காலையில் அவரை ‘‘எங்களை பற்றி வெளியே சொன்னால் உயிருடன் விடமாட்டோம்’’ என எச்சரித்து அனுப்பியுள்ளனர். மாணவர் இந்த விவரங்களை தனது பெற்றோரின் செல்போனில் தொடர்பு கொண்டு அழுது கொண்டே தெரிவித்தார். அவர்கள் கோவை வந்து மகனை பார்த்து ஆறுதல் கூறினர். இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பணம் கேட்டு மிரட்டி, கொடூரமாக ராகிங் செய்தது அந்த கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் மணிகண்டன் (20), நித்யானந்தன் (20), அய்யப்பன் (21), தரணீதரன் (20), சந்தோஷ் (21), வெங்கடேஷ் (20), யாஜீஸ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. 7 பேர் மீதும் ராகிங் செய்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கைதான 7 மாணவர்களையும் அந்த கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது.

* ராகிங் தடுப்பு குழுவிற்கு மாணவர்கள் புகார் தரலாம்
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் தடுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ராகிங் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங் செய்வது குற்றம். இது தொடர்பாக பல இடங்களில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவரங்களை கல்வி நிர்வாகம் மாணவர்களுக்கு வலியுறுத்தி தெரிவிக்க வேண்டும். ராகிங் செய்வதை கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. கல்வி நிறுவனத்தினர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கவில்லை என்றால் கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை