கோவையில் காவலரை வெட்டிவிட்டு தப்பியபோது அதிரடி; பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு: 15 வழக்குகளில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி

கோவை: கோவையில் 15 வழக்குகளில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். கோவை பீளமேடு போலீசார் விமான நிலையம், கொடிசியா, ஹோப்ஸ் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, கொடிசியாவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் ஒருவர் பேக்குடன் ரகசியமாக பதுங்கியிருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடிக்க முயன்ற போது, திடீரென கத்தியால் ஏட்டு ராஜ்குமாரை குத்தினார். இதில் அவருக்கு கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கத்தியால் போலீசாரை மிரட்டி தப்ப முயன்ற போது எஸ்ஐ கார்த்திகேயன் தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில், அவரது இரண்டு கால் முட்டியில் 2 குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் போலீசார் அவரை வேனில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் துணை கமிஷனர் ஸ்டாலின் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரித்தனர்.

விசாரணையில், சுடப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வாத்தியார் விளை அம்மன் கோயில் தெரு 4வது வீதியை சேர்ந்த ஏ பிளஸ் ரவுடி ஆல்வின் (40) என தெரியவந்தது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள 100 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்த ரவுடி சத்திய பாண்டி (34) தலைமையிலும், மற்றொரு பிரிவினர் சஞ்சய் ராஜா (37) தலைமையிலும் மோதி வந்தனர். இதில், சஞ்சய் ராஜா குரூப்பை சேர்ந்த தில்ஜித் (44), ஆல்வின் உள்ளிட்ட சிலர், சத்திய பாண்டியை கடந்த 2023 பிப்ரவரி மாதம் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் ராஜா, ஆல்வின் உள்பட 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த கொலை மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் ஒரு கொலை, திருநெல்வேலியில் ஒரு கொலை, 4 கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி என 15 வழக்குகள் ஆல்வின் மீது உள்ளன. பல்வேறு ரவுடி கும்பலுடன் ஆல்வினுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்தது.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு