கோவையில் கூவி கூவி ஆள் சேர்த்த பாஜ பிசுபிசுத்த பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’: வடமாநில மக்களே புறக்கணிப்பால் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கான தேர்தல் முதல் 2 கட்டத்தில் முடிகிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே தென் மாநிலங்களை சுற்றி சுற்றி வருகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்து உள்ளார் பிரதமர் மோடி. கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் ரோடு ஷோவில் நேற்று பங்கேற்றார்.

இதற்காக நேற்று மாலை 5.45 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ரோடு ஷோ நடக்கும் சாய்பாபா காலனி பகுதிக்கு மாலை 6.10 மணியளவில் வந்தார். அங்கிருந்து ரோடு ஷோ தொடங்கியது. திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு பிரதமர் மோடி பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி வந்தார். அந்த வாகனத்தில் மோடியுடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

சாய்பாபா கோவில் எதிரே தொடங்கிய வாகன பேரணியானது வடகோவை மேம்பாலம் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரையில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தது. இந்த ரோடு ஷோவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக வடமாநில மக்கள் அதிகம் வசிக்கும் ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலையை மையமாக வைத்து ரோடு ஷோ அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் பல்லட்டத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு புது ஆடைகள் வாங்கி கொடுத்து, பணம் கொடுத்து அழைத்து வந்தனர்.

அதேபோல், இந்த முறையும் வடமாநில தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். மோடி நிகழ்ச்சிக்கு இந்தி பேசும் மக்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் வடமாநில மக்கள் கூட்டமாக வரவில்லை. இதை சமாளிக்க சிவனடியார்கள், பூசாரிகளை வரவழைத்து கட்சியினர் சமாளித்தனர். வடமாநில மக்களே மோடி நிகழ்ச்சியை புறக்கணித்ததால், பாஜவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் சொற்ப அளவில்தான் கூட்டம் இருந்தது. 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜ தலைவர்கள் கூறியதால் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டினர்.

இருப்பினும், பணத்தை பெற்று கொண்ட பலர் ரோடு ஷோவில் பங்கேற்கவில்லை. இதனால், மோடி ரோடு ஷோ நடந்து கொண்டிருக்கும்போது கூவி கூவி ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர்களை எல்லாம் அழைத்து வந்து கூட்டத்தை காட்டினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக கோவை நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை அழைத்து வர பாஜ நிர்வாகிகள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி கூட்டத்தை கூட்ட முடியவில்லை.

இதனால் சாலையின் இருபுறமும் குறைந்த அளவே பொதுமக்கள், தொண்டர்கள் இருந்து மோடி யை மலர் தூவி வரவேற்றனர். கொங்கு மண்டலம் எங்களுக்கு பலமானது என்று பாஜவினர் கூறினாலும், கோவையில் மோடிக்கு கூட்டம் வரவில்லை. குறிப்பாக, அண்ணாமலை கோவையில் போட்டியிட போவதாக கூறும் நிலையில் கூட்டம் கூடாததால் பாஜ தலைவர் அப்செட்டில் உள்ளனர். இந்த ரோடு ஷோ முடிவில் ஆர்.எஸ்.புரத்தில் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுத்தார்.

* முக்கிய சாலைகள் மூடல்; போக்குவரத்து முடக்கம் 6 கி.மீ நடந்த மாணவர்கள்
பிரதமர் மோடி வருகையொட்டி கோவை மாநகரில் பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலை எருகம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த பகுதியில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கு உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. பேருந்துகள் கிடைக்காத காரணத்தால் தேர்வு முடிந்து வீட்டிற்கு மாணவ, மாணவிகள் நடந்தே சென்றனர்.‌ பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. பேருந்துகள் இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்றனர். பலர் வீடுகள் வரை நடந்தே சென்றனர்.

* புதுசா ரோடு போட்டாங்க… உடைச்சி எடுத்துட்டாங்க…
கோவையில் மோடியின் ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் ரோடு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக புதிதாக போடப்பட்டதார்சாலையில் ராட்சத மெஷின் கொண்டு துளை போடப்பட்டு, இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது. கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், பில்லூர்-3 குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் போன்ற பல்ேவறு திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு தற்போதுதான் புதிய சாலைகள் போடப்பட்டன. அந்த சாலைகளை பிரதமர் வருகைக்காக துளை போட்டு குண்டும், குழியமாக்கி வீணாக்குகிறார்களே என அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

* 10,000 கடை மூடல்; பல கோடி வருவாய் பாதிப்பு
பிரதமர் மோடி ரோடு ஷோவுக்காக மேட்டுப்பாளையம் சாலையில் எரு கம்பெனி முதல் பூ மார்க்கெட் வரையும், 100 அடி ரோடு, புதுபாலம் முதல் சாய்பாபாகோவில் வரையிலான சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த சிறு, பெரிய கடைகள், கம்பெனிகள், கார், பைக் ஷோரூம்கள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், கம்பெனிகள் மூடப்பட்டன. இதனால் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இது தவிர மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் போலீசார் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு