கோவை மாவட்டம் வால்பாறையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வால்பாறையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று (30.7.2024) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (எ) முத்து (வயது 57) க/பெ. ஆறுமுகம் மற்றும் தனப்பிரியா (வயது 15) தா/பெ. சுகுணா ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஓட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று (30.07.2024) இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) த/பெ.அன்பழகன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த இருவேறு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்