கோவை அருகே இன்று நடக்கிறது மகள் திருமணத்தை 3 மதத்தினர் முன்பு நடத்தும் போலீஸ் அதிகாரி-சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பத்திரிகை

கோவை: மகள் திருமணத்தை போலீஸ் அதிகாரி 3 மதத்தினர் முன்பு நடத்துகிறார். இது தொடர்பாக பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்தார். மதம் சார்ந்த பிரச்னைகளை கையாளும் இந்த துறையில் அனுபவம் பெற்ற இவர் பல்வேறு மதங்களை சார்ந்த நிர்வாகத்தினருடன் இணக்கமாக பழகினார். இவருக்கு ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருது வழங்க்பட்டது.

இவரது மகள் நிஷாந்தினி. பிஎச்டி படித்து வருகிறார். இவருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த பட்ட மேற்படிப்பு முடித்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண விழா கோவை அருகே உள்ள சூலூர் திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்தை சார்ந்த குருமார்கள் முன்னிலையில் நடத்த போலீஸ் அதிகாரி வெற்றிச்செல்வன் முடிவெடுத்தார்.

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கௌமார மடாலயம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் மற்றும் போத்தனூர் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் இமாம் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோர் முன்னிலையில் இந்த திருமணம் நடத்தப்பட உள்ளது. இந்த தகவல்களுடன் பத்திரிகை அச்சடிக்கப்பட்டுள்ளது.

அதில், ‘‘உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’’ என்ற திருக்குறளும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த பத்திரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்று நடைபெறும் திருமண விழாவில் டிஜிபிக்கள் விஸ்வநாதன், சீமா அகர்வால், ஏடிஎஸ்பி அமல்ராஜ் மற்றும் கோவை எஸ்பி பத்ரிநாராயணன் பங்கேற்கவுள்ளனர். அடிகளார், ஆயர், இமாம் முன்னிலையில் மகள் திருமணத்தை போலீஸ் அதிகாரி நடத்த திட்டமிட்டது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை