கோவை அருகே பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: சார் பதிவாளர் காரில் ₹2.80 லட்சம் பறிமுதல்

பெ.நா.பாளையம்: கோவை அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். சார்-பதிவாளர் அருணா காரில் இருந்த கணக்கில் வராத ரூ.2.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார்-பதிவாளர்களாக அருணா, ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவில் அதிகளவில் மோசடிகள் நடப்பதாகவும், நில ஆவணங்களில் போலியாக திருத்தங்கள் செய்து பதிவு செய்வதாகவும், பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் அதிகளவு லஞ்சம் வாங்குவதாகவும், புரோக்கர்களின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அலுவலக நேரம் முடிந்து இரவு நேரங்களில் நடப்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணி அளவில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தனர். அப்போது சார்-பதிவாளர் அருணா வீட்டுக்கு செல்வதற்காக வாடகை காரில் ஏறி உள்ளார். அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், காரில் சோதனை செய்தனர். அதில், கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சோதனையில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கதவுகளை அடைத்து விட்டு உள்ளே இருந்த பணியாளர்களை வெளியேற கூடாது என கூறி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிவரை இந்த சோதனை நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை விவரங்கள் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு