கோவை-பெங்களூரு இடையே இயக்கம் தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கோவை: தமிழகத்தில் ஏற்கனவே 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை சென்ட்ரல் – பெங்களூரு, சென்னை சென்ட்ரல் – மைசூர், சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவைகள் உள்ளன. இந்தநிலையில் 5வது வந்தே பாரத் ரயில் கோவை- பெங்களூரு இடையே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியா தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 6 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் கோவை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையும் ஒன்று. இதையொட்டி கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.பி. பி.ஆர்.நடராஜன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோவை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு 7.20 மணிக்கும், தர்மபுரிக்கு 8.32 மணிக்கும், ஓசூருக்கு 10.05 மணிக்கும் சென்று, பெங்களூரை 11.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் நண்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஓசூருக்கு 2.50 மணிக்கும், தர்மபுரிக்கு 4.16 மணிக்கும், சேலத்திற்கு 5.53 மணிக்கும் வந்து கோவையை இரவு 8 மணிக்கு வந்தடையும். 380 கி.மீ. தூரத்தை வந்தே பாரத் ரயில் 6 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண சேர்கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1,000, எக்ஸிகியூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் ரூ.1,850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 8 பெட்டிகள் கொண்ட இந்த வந்தே பாரத் ரயிலின் ரெகுலர் சேவை வருகிற நாளை முதல் தொடங்கவுள்ளது.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை