தேங்காய்ப்பூ சம்பா!

பாரம்பரிய நெல் ரகங்களில் மிகவும் வித்தியாசமான தன்மையுடையது தேங்காய்ப்பூ சம்பா. மேற்கு வங்க மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த ரகம் அங்கிருந்து இந்தியா முழுக்க பரவியது. குறிப்பாக, தற்போதைய பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைப் பிரிக்கும் இச்சா ஆற்றுப் பகுதிதான் இதன் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இன்றும் இந்தப் பகுதியில்தான் இது அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் அரிசிப் பொரி வழிபாட்டுக்கு உரிய பொருட்களில் ஒன்றாக தொன்றுதொட்டு வருகிறது. இந்தியா முழுதும் பல்வேறு பண்பாடுகளில் பல்வேறு வகையான சடங்குகளுக்காக அரிசிப் பொரி தயாரிக்கப்படுகிறது. அப்படித் தயாரிக்கப்படும் அரிசிப் பொரிகளில் தேங்காய்ப்பூ சம்பாவில் தயாராகும் அரிசிப் பொரிக்குத்தான் மவுசு அதிகம். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக, நெல் மணிகள் இதழ் இதழாகத்தான் இருக்கும். ஆனால், இதன் நெல் மணிகள் கொத்துக் கொத்தாய் காய்க்கும் இயல்புடையவை.தேங்காய்ப்பூ சம்பாவில் இனிப்புச் சத்து ஓரளவு இருக்கும். இதனால் உடலுக்கு உடனடி எனர்ஜி கிடைக்கும். கார்போஹைட்ரேட் சத்தில் அயானிக் அளவிலான நுண்ணூட்டச் சத்துகள் இருப்பதால் உடலுக்கு வலுவைத் தரும். தடித்த மோட்டா ரகமாக இருப்பதால் நன்கு பசி தாங்கும். செரிமானத்தைச் சீராக்கும். வயிற்றுக்கோளாறு இருப்பவர்கள் தேங்காய்ப்பூ சம்பாவில் கஞ்சி வைத்துக் குடித்து வர குணமாகும். வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும் இயல்புடையது.

அதிகபட்சமாக 140 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் தேங்காய்ப்பூ சம்பா நான்கு அடி வரை வளரக்கூடியது. வளரும் காலத்தில் சற்றே சாயும் தன்மை கொண்டிருந்தாலும் விளைச்சல் பாதிக்கப்படாது. எனவே, நெற்பயிர் சாய்ந்திருந்தால் அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். பொதுவாக, ஒரு ஏக்கருக்கு 25 கிலோ விதை நெல்லே போதுமானது. இது ஒற்றை நாற்று முறையில் நடவு செய்யவும் தெளிக்கவும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 25 மூட்டை நெல் வரை விளையக்கூடியது.வடிகால் வசதி செய்துகொண்டு இரண்டு சென்ட் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து, 25 கி.கி சலித்த மண்புழு உரத்தைத் தூவிய பின் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் சுண்டிய பிறகு, விதைநெல்லைத் தூவ வேண்டும். களைகள் முளைத்து வரும்போது அகற்றி ஒன்பதாவது நாளின்போது பத்து லிட்டர் தண்ணீரில், 500 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யா கரைசல் நாற்றுகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கவல்லது. சரியாக, 16ம் நாளில் நாற்றுகளை நடவு செய்யலாம். நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பறித்த அரை மணி நேரத்துக்குள் சேற்று வயலில் நடவு செய்துவிட வேண்டும். பசுந்தாள் உரத்தை விதைத்து மடக்கி உழவு செய்யப்பட்ட நடவு வயலில், 10 லோடு தொழுவுரம் இட்டு சேற்று வயலைச் சமன்படுத்த வேண்டும். பிறகு, ஒரு நாற்றுக்கும் இன்னொரு நாற்றுக்கும் இடையில் 25 செ.மீ இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டியது அவசியம். பத்து நாட்களுக்கு ஒருமுறை கோனோவீடர் மூலமாக களைகளை அழுத்திவிட வேண்டும். 30ம் நாளிலிருந்து மாதத்துக்கு ஒருமுறை பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலக்க வேண்டும். ஜீவாமிர்தம் பயிர்கள் பச்சைக்கட்டி வளர உதவும். வேர் அழுகல் நோயும் பூஞ்சாணத் தொற்றும் முக்கியமான பிரச்னைகள். இயற்கை விவசாயத்தில் வேம்புத்தூள் கரைசலும் சுக்குநீர் கரைசலும் இவற்றுக்கு மிகச் சிறந்தத் தீர்வு. 10 கிலோ காய்ந்த வேப்பங்கொட்டையைப் பொடியாக்கி, சுத்தமான கோணிப்பையில் இட்டு, மூட்டையாகக் கட்டி, நீர் மடைவாசலில் அது மூழ்கும்படி வைத்துவிட வேண்டும். மூட்டைக்குள் இருக்கும் துகள்கள், வயலுக்குள் செல்லும்

பாசன நீருடன் கலந்து செல்வதால் வேர் அழுகல் நோயும் தண்ணீர் வழியே பரவும் பூச்சிப் பரவலும் தடுக்கப்படும். இளங்கதிர் பருவத்தில் பயிர்களைத் தாக்கும் இன்னொரு மோசமான நோய் பூஞ்சாணத் தொற்று. இதைக் கட்டுப்படுத்த 200 கிராம் சுக்குத்தூளை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலக்கி காய்ச்சி ஆறிய பிறகு, 5 லிட்டர் பசும்பாலை அதனுடன் கலந்து, தாமிரம் அல்லாத வேறு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை, மாலை வேளைகளில் தெளித்தால் பூஞ்சாணத் தொற்று அண்டாது. மற்ற பூச்சிகளும் கட்டுப்படும். கதிர் நாவாய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்தவும் இயற்கை விவசாயத்தில் மருந்து உள்ளது. வேம்பு எண்ணெய் 45 சதவீதம், புங்கன் எண்ணெய் 45 சதவீதம், காதி சோப் கரைசல் 10 சதவீதம் என கலந்து வைத்துக்கொண்டு, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் வீதம் கலந்து தெளிக்கலாம். இந்த தேங்காய்ப்பூ சம்பா 130 லிருந்து 140வது நாளில் அறுவடை செய்ய ஏற்றது. வட இந்தியாவில் இருந்து வந்தாலும் நம் நிலத்தில் குறிப்பாக நமது கடலோர மாவட்டங்களில் ஆறு கடலோடு சேரும் பகுதிகளில் மிகச் சிறப்பாக விளையக்கூடிய இயல்புடையது. தற்போது, தமிழகத்தில் பொரித் தேவைக்காக நவீன நெல் ரகங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் தேங்காய்ப்பூ சம்பா பொரி வேறு எந்த ரக அரிசிப் பொரியை விடவும் உருவத்தில் பெரிதாக இருக்கும். ருசியும் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும், இந்தியா முழுதும் இதற்கான சந்தை இருப்பதால் நம்பிப் பயிரிடலாம்.

 

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி