தேங்காய்ப்பாலில் டீ காபி!

பாஸ்தா, கேக் என பலவும் இருக்கு…

காலையில் எழுந்தவுடன் நாம் பருகும் தேநீரில் இருந்து கேக், ஸ்வீட் என நாம் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்துமே பால் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்தான். சிறுவயதில் இருந்தே பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளைத்தான் ருசித்திருப்போம். உலகம் முழுவதுமே சமையல் தயாரிப்புகளில் பால் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பல பிரபலமான வெளிநாட்டு உணவுகள், கேக்குகள் இருக்கின்றன. நமது ஊரில் கிடைக்கும் சில ட்ரெடிஷனல் உணவுகள் தயாரிப்பிற்குக் கூட பால்தான் மூலதனம். இன்னும் சொல்லப்போனால் பால் இல்லாமல் நமக்கு பொழுது விடியாது. தேநீர் குடித்துவிட்டு அந்த நாளைத் தொடங்கினால்தான் எல்லாம் சுபமாக இருக்கும் என நம்புகிறோம். விசயம் இப்படி இருக்க, நம்ம பெசன்ட் நகரில் இயங்கி வரும் `கோகோ சாய்’ என்கிற ரெஸ்டாரென்டில் பாலுக்கு பதிலாக தேங்காயைத் துருவி, அதிலிருந்து எடுக்கப்படும் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் என டிஃப்ரன்ட்டுகளை ட்ரிங்க் வழங்குகிறார்கள். மிகவும் புதுமையாக இருக்கிறதே, அப்படி என்னதான் இந்த இடத்தில் ஸ்பெஷல் என அறிய அந்த ரெஸ்டாரென்டிற்கு விரைந்தோம். பெயரையே கோகோ என வைத்திருக்கும் இந்த `கோகோ சாய்’ ரெஸ்டாரென்ட் கடற்கரையைப் பார்த்தபடி இருக்கிறது.

அப்படி என்னதாங்க உங்க கடைல ஸ்பெஷல்? பாலுக்குப் பதிலாக அனைத்து உணவுகளுமே தேங்காய்ப் பாலில் தயாரித்துக் கொடுக்கிறீர்களே? இந்த ஐடியா எப்படி வந்தது? எனக் கேட்டதும் சிரித்தபடியே பேசத் தொடங்கினார் ரெஸ்டாரென்டின் உரிமையாளர் தினேஷ்.“எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். படித்தது பி.இ. இன்ஜினியரிங். படித்து முடித்தவுடன் எல்லோரையும் போல நானும் வேலைக்குச் சென்றேன். அப்போதெல்லாம் சாப்பிடுவதற்காக நண்பர்களோடு ஊர்விட்டு ஊர் செல்வேன். பெரிய பெரிய உணவகங்களில் ஸ்பெஷலான உணவு எதுவோ அதை விரும்பி சாப்பிடுவேன். சிறுவயதில் இருந்தே உணவின் மீது தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அதனால், புதுப்புது உணவுகள் எங்கெல்லாம் கிடைக்குமோ அங்கெல்லாம் சென்று ருசி பார்த்துவிட்டு வருவேன். ஒரு கட்டத்தில் நாமே ஏதாவது ஸ்பெஷலான உணவகத்தை ஆரம்பிக்கலாம் எனத் தோன்றியது. என்னைப் போலவே உணவு விரும்பியான எனது நண்பன் பிரவீனுக்கும் என்னைப் போலவே உணவகம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து உணவகத்தைத் தொடங்கலாம் என யோசித்தோம். அப்படி நாங்கள் இணைந்து கொண்டுவந்த ரெஸ்டாரென்ட்தான் இந்த கோகோ சாய்.

எந்த ஊரில் எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் அந்த உணவுகள் பெரும்பாலும் பாலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவாகவே இருக்கிறது. ஒரு மாறுதலுக்காக பாலுக்குப் பதிலாக தேங்காய்ப் பாலைக்கொண்டு உணவுகள் தயாரித்தால் எப்படி இருக்கும் என யோசித்தோம். உடனடியாக அதை செய்தும் பார்த்தோம். முதன்முதலாக தேநீர் செய்து பார்த்தோம். பலமுறை தோல்வியே வந்தது. எந்த பக்குவத்தில் பாலை எடுப்பது, எந்த மாதிரியான தேங்காய் வாங்க வேண்டும், எந்த கொதிநிலையில் தேங்காய்ப் பாலில் தேநீர் போட வேண்டும் என தேடலில் இறங்கினோம். மீண்டும் மீண்டும் பலமுறை முயற்சி செய்து கடைசியாக சரியான தேநீரைத் தயார் செய்தோம். அதைத் தொடர்ந்து காபி, மில்க் ஷேக். பாயசம், ஜூஸ், சாண்ட்விச், பாஸ்தா, கேக்ஸ், சிக்கன் புட்ஸ் என உணவுத் தயாரிப்பில் எங்கெல்லாம் பால் பயன்படுத்துகிறார்களோ அங்கெல்லாம் தேங்காய்ப்பாலை வைத்து அந்த உணவைத் தயார் செய்தோம். ஒவ்வொரு உணவாக இப்படி செய்து பார்த்து கற்றுக் கொண்டோம். எங்களது செஃப்களுக்கும் அந்த செய்முறையை சொல்லிக் கொடுத்து இப்போது முழுமையாக தேங்காய்ப் பாலில் தயாரிக்கப்படும் உணவுகளை மட்டுமே கொடுத்து வருகிறோம்’’ என கடை தொடங்கிய கதையைப் பகிர்ந்துகொண்டார் தினேஷ்.

இவரைத் தொடர்ந்து பிரவீன் பேசும்போது, “இந்த உணவு தயாரிப்பதற்கு ரொம்ப முக்கியமானது தேங்காய்தான். ஒரே மாதிரியான, ஒரே சுவையுள்ள தேங்காய்தான் தேவை. வெவ்வேறு சுவையுள்ள தேங்காயில் சமைத்தால் நாம் நினைத்ததுபோல் உணவுகள் வராது. அதனால், எனது சொந்த ஊரான தேனியில் இருக்கிற எனது தோட்டத்தில் இருந்து ஒரே சுவையுடைய தேங்காய்களை வாரந்தோறும் வரவைக்கிறோம். அந்த தேங்காய்களையும் மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்க மாட்டோம். தேங்காய் பழசானால் உணவின் சுவையும் மாறிவிடும். ஸ்பெஷலான புதுவகையான உணவுகளைக் கொடுப்பது நல்ல விசயம்தான் என்றாலும் அதை வாடிக்கையாளர்களுக்கு பிடித்த சுவையில் கொடுக்க வேண்டும். அதுதான் சவாலான விசயம். அதனால் நாங்கள் சுவையான உணவுகளைக் கொடுப்பதிலும் கவனமாக இருந்தோம்.தேங்காயை மட்டுமே வைத்து தயாரிக்கப்படும் உணவு என்பதால் இந்த உணவுகளைத் தயாரிப்பதற்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தினோம். உலகெங்கிலும் பல இடங்களில் பாதாம் பால், முந்திரிப் பால் வைத்து பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், தேங்காய்ப் பாலை வைத்து எந்த உணவுகளும் தயாரிக்கப்படவில்லை. எங்கள் ரெஸ்டாரென்டில் தயாரிக்கப்படும் பாயாசத்தில் கூட தேங்காய்தான் பயன்படுத்துகிறோம். அதுபோக, பால் கொண்டு தயாரிக்கப்படும் எல்லா வகையான ஜூஸ்களையுமே நாங்கள் தேங்காய்ப் பால் கொண்டே தயாரித்துக் கொடுக்கிறோம். தேங்காய்ப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளில் எங்களது சிக்னேச்சர் உணவுகள் பல இருக்கின்றன. பல வகையான தேநீர், ஜூஸ், காபி, கேக்ஸ், டெசர்ட்ஸ், ஹாட் காபி என எல்லாமே இருக்கு. மெயின் உணவுகளான தேங்காய்ப்பால் சாதம், அதில் சிக்கன், வெஷ் என வெரைட்டியும் இருக்கின்றன. பாஸ்தாவைக் கூட நாங்கள் தேங்காய்ப் பாலில் தயாரிக்கிறோம். அதிலும் பல வகையான வெரெட்டிகள் கொடுத்துவருகிறோம். இப்படி உலகெங்கும் கிடைக்கும் உணவுகளை நமது ட்ரெடிஷனல் உணவுப்பொருளான தேங்காயைக்கொண்டு தயாரிக்கப்படுவது நாங்கள் மட்டும்தான். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் கூட ருசித்துவிட்டு எங்களிடம் உணவு செய்முறையைப்பற்றி கேட்டுச் செல்கிறார்கள். அந்தளவிற்கு அனைவரும் விரும்பும் உணவைக் கொடுத்து வருவது ஒரு வகையில் மகிழ்ச்சியே’’ என்கிறார்.

உலகின் பல இடங்களில் பண்டிகை நாட்களில் தேங்காய்ப்பாலை வைத்து உணவுகள் தயாரிக்கப்பட்டது. கேரளாவிலும் கூட பல வருடங்களுக்கு முன்பு பண்டிகை நாட்களில் தேங்காய்ப் பாலில் தேநீர், பாயாசம் என தயாரித்து வந்தனர். அந்தளவிற்கு இது ட்ரெடிஷனல் உணவாக மட்டுமே இருந்தது. ஆனால், உலகிலேயே முதல்முறையாக தேங்காய்ப் பாலில் இத்தனை வகையான உணவுகளைக் கமர்சியலாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்றது நாங்கள் மட்டும்தான் என்கிறார்கள் இந்த நண்பர்கள்.

ஆ.வின்சென்ட் பால்

Related posts

சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி