கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை தமிழில் வெளியிட வழக்கு

மதுரை: கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை தமிழில் வெளியிடக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த ரொசாரியோ விஜோ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடலோரம் மற்றும் கடற்கரையை பாதுகாத்திடும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் சார்பில் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதன்படி, கடலோர மற்றும் மீனவ மக்களிடம் கருத்து கேட்டு, கடலோர மண்டல மேலாண்மை வரைவு திட்டம் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், கடலோர மற்றும் மீனவ மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. தவறாக புரிந்துள்ளனர். இவர்களுக்கு விளக்கி கூறி, புரிதல் ஏற்படுத்தாமல், கடலோர மண்டல மேலாண்மை வரைவுத் திட்டம் தயாரிப்பது சரியாக இருக்காது. சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்