கடலோர மாவட்டத்தில் இலை கட்சி காணாமல் போய்க்கொண்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கட்டாய கல்வி திட்டத்துல கூட லிஸ்ட் போட்டு கலெக்‌ஷன் பார்க்கிறாராமே ஒரு கல்வி அதிகாரி..’’ என முதல் கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல 4 எழுத்து பெயர் கொண்ட பிரியாணி ஊர்ல கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்க இருக்குற ஒரு கல்வி அலுவலர் கலெக்‌ஷன் இருந்தால்தான் கோப்புகளை நகர்த்துறாராம்.. இல்லாவிட்டால் கிடப்புல போட்டுவிடுறாராம்.. ஆசிரியர்களுக்கான பணிகளுக்கு கூட கலெக்‌ஷன் இருந்தால் மட்டுமே ஆர்டர் வழங்குறாராம்.. இல்லாவிட்டால் ஸ்டாப் பண்ணிடுறாராம்.. அதுமட்டுமில்லாம, அரசு ஏழை மாணவர்களுக்காக நடைமுறை படுத்தி வர்ற திட்டமான கட்டாய கல்வி திட்டத்துல, தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களை இவர் லிஸ்ட் போட்டு ரேட் பிக்ஸ் பண்ணி கலெக்‌ஷன் பார்க்குறாராம்.. இதற்கு சில ஆசிரியர்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் பக்கபலமா இருக்காம்.. அதோட, மாணவர்களுக்கான புத்தகங்களை எடுத்து செல்ல அரசு நிதி கொடுக்குது.. ஆனா, ஆசிரியர்களை அவங்களோட சொந்த செலவுல புத்தகங்களை எடுத்துட்டு போங்க.. இல்லன்னா எப்படி உங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு எனக்கு தெரியும்னு மிரட்டுறாராம்.. சில ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி சொந்த வாகனங்களுக்கு பெட்ரோல் போடவும் சொல்றாராம்.. அதோட ஆய்வுக்கு போன, இந்த ஊர்ல பிரியாணி பேமஸ், ஒரு அதிகாரிக்கு பிரியாணி கூட தர மாட்டீங்களான்னு அதட்டல் வேறயாம்.. இப்படி கல்வி வட்டாரத்துல புலம்பல் சத்தம் அதிகமாக கேட்கத்தொடங்கியிருக்குது.. மாவட்ட நிர்வாகமும் உண்மைய விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் ஆதவாளர் முக்கிய பொறுப்புல தொடர்வதால் கடலோர மாவட்டத்தில் இலைக்கட்சியே காணாமல் போகும்னு முக்கிய நிர்வாகிகள் குமுறுகிறார்களாமே..’’ எனக்கேட்டார் பீடடர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலைக்கட்சி தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகிறது.. இது உள்ளூர் கட்சிக்காரர்கள் மட்டுமின்றி மேல்மட்ட தலைவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் பறிகொடுத்த பரிதாபம், உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்திலுள்ள 11 ஒன்றியங்களில் 9 ஒன்றியங்களை இழந்ததுடன் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் டெபாசிட் இழப்புன்னு மாவட்டத்தில் இலைக்கட்சி இருப்பதே தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கு.. குறிப்பாக, இலைக்கட்சியின் மாவட்ட முக்கிய பொறுப்பில் இருக்கும் சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியில் தொடர்கிறார். இவரது நடவடிக்கைகள் தான் கட்சியை காணாமல் போகச் செய்துள்ளதாக கட்சியினரே வெளிப்படையாக கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.. இதுதொடர்பாக மாஜி அமைச்சர்கள், மாஜி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சேலத்துக்காரரை சந்தித்து புகார் வாசித்தாங்களாம்.. இதனால், சேலத்துக்காரர் தரப்பு கடலோர மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒன்றில் தனது ஆதரவாளரான தற்போதைய நிர்வாகியையும், மற்றொன்றில் மாஜி அமைச்சர் ஒருவரையும் நியமிக்கலாமானு யோசித்து வருகிறதாம்.. மாற்றம் எவ்வழியாக இருந்தாலும் தற்போதைய முக்கிய நிர்வாகிக்கு பொறுப்பு தொடர்வதுதான் மாஜிக்களை வருத்தம் கொள்ள செய்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கதர்கட்சி தலைவர்களின் விழாக்களை கதர் கட்சியினரே புறக்கணிக்கிறாங்களாமே எதுக்காம்…’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் கதர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள், தலைவர்கள் போன்றவர்களின் விழாக்களை கொண்டாடுவதில் சலிப்பு ஏற்பட்டுள்ளதாம்.. முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாளை அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கதர் கட்சியினர் வெகு விமரிசையாக கொண்டாடிய நிலையில் கடை கோடி மாவட்டத்தில் அவரை கொண்டாட வேண்டிய கதர் கட்சியினர் கண்டுகொள்ளவில்லையாம்.. எந்த பகுதியிலும் விழாக்கள் நடைபெறவில்லையாம்.. அண்மையில் மார்ஷல் நேசமணியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தபோதும் கதர் கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.. கதர் கட்சியினரின் தலைவர்களை கதர் கட்சியினரே இப்படி கண்டுகொள்ளாமல் இருக்கலாமானு கேள்வி எழுப்புகின்றனராம் பொதுமக்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டா திருத்தத்திற்கு போனா கறக்க வேண்டியது கறந்த பிறகுதான் பெயர் மாற்றத்திற்கே பரிந்துரைக்காங்களாமே..’’ கடைசி கேள்விக்கு சென்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது, 1998ல் பட்டாக்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தாங்களாம்.. அப்போது கள ஆய்வு செய்து இருக்காங்க.. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இந்த பட்டாக்களின் பெயர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு 4 சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் முறையாக கள ஆய்வு செய்யாமல், பொது அறிவிப்பு விடுத்து, அதன்படி வந்தவர்களுக்கு பட்டாக்களில் திருத்தம் மற்றும் சப் டிவிஷன் செய்துள்ளனர். மீதம் உள்ள பெரும்பாலானோருக்கு தற்போதைய சொத்தின் நிலை குறித்த விவரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், தற்போது உள்ள சொத்தின் உரிமையாளர் பெயர் இன்றி 20 ஆண்டுகள் முன்பு உள்ள பெயர்கள் வருகின்றன. சொத்துகளில சப் டிவிஷன் செய்யப்படாததால், குறிப்பிட்ட சர்வே எண்ணில் பலரது பெயர்கள் உள்ளன. இதனால், சொத்துகளை விற்பனை செய்யும்போது, பட்டாவில் முந்தைய உரிமையாளரின் பெயர் இருப்பது அறிந்து பட்டா திருத்தத்திற்கு தினசரி மாநகராட்சி சர்வேயர் மற்றும் நகரமைப்பு பிரிவிற்கு செல்வோர் அதிகரித்துள்ளனர். அங்கோ, மக்களை அலைய விடும் அதிகாரிகள் சொத்தின் மதிப்பிற்கு ஏற்ப கறக்க வேண்டியதை கறந்து விட்டுதான் பெயர் மாற்றம் செய்ய தாசில்தாருக்கு பரிந்துரை செய்கின்றனராம்.. யாரோ செய்த தவறுக்கு பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் என்றால், எந்த அதிகாரியோ செய்யாமல் விட்ட பணிக்கு தற்போது, மாநகராட்சி அதிகாரிகளின் சிலரது பாக்கெட்டுகள் நிரம்புகிறதாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்