கரையோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் சுருங்கி வரும் பரமக்குடி வைகை ஆறு

*நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் சுருங்கி வரும் வைகை ஆற்றை மீட்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி வைகை ஆறு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவையை போக்கும் ஜீவ நதியாக உள்ளது. தற்போது ஆற்றில் ஆக்கிரமிப்பு அதிகரித்துக் கொண்டிருகிறது. பரமக்குடி வைகை நகர் பகுதி ஆற்றில் ஓட்டல்களுக்கு வியாபாரம் செய்வதற்காக கரிக்கொட்டைகளை தயார் செய்து வருகின்றனர்.

இதுபோக ஆடு, மாடுகளையும் கட்டி வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.இப்பகுதியில் இரவு நேரங்களில் ஆற்று மணலை கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டுகளில் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வைகை ஆற்றின் கரையின் உள்புறத்தில் தனியார் ஆக்கிரமித்து கொண்டு, தங்களுக்கு சொந்த இடம் எனக்கூறி வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்தபோது, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதிகாரிகளின் துணையோடு விற்பனை செய்துவிட்டனர்.

இதேபோல் காட்டுபரமக்குடி அரசு மருத்துமனை எதிரே வைகையாற்றின் கரையோரத்திலிருந்து காட்டுபரமக்குடி மேல்நிலை நீர்தேக்க தொட்டிவரை கரையோரத்தில் உள்ள வைகையாற்றில் தடுப்புச்சுவர் கட்டி வீட்டுமனைகள் உருவாக்கி விற்பனை செய்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேல வைகை ஆற்றின் இரு கரையோரங்களில் சர்வீஸ் சாலை அமைத்த பின்பும் அடுக்கடுக்கான ஆக்கிரமிப்புகளால் வைகை ஆறு சுருங்கி வருகிறது. மேலும் நகராட்சி சார்பாக சேகரிக்கப்படும் குப்பைகள் வாருங்கள் கழிவு மண் கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவை வைகை ஆற்றுப்பகுதியில் கொட்டப்படுவதால் அதனை சாதனமாக பயன்படுத்திக்கொண்டு தனி நபர்கள் குடிசைகள் மற்றும் வேலிகள் அமைத்து படிப்படியாக ஆக்கிரமித்து வருகின்றனர்.

இதுகுறித்து பரமக்குடியை சுரேஷ் கூறுகையில், ‘‘பரமக்குடி வைகை ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. கோயில்களை வைகை ஆற்றுக்குள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். பிற்காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, மதப் பிரச்சனை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் முன்பே தடுத்து நிறுத்தவேண்டும்.

வைகை ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சிலர் சர்வீஸ் சாலையை கடந்து ஆற்றின் உள்பகுதியில் மணல் கொட்டி வைப்பது, கிணறு உரை தயாரிப்பு, மரக்கரி தயாரிப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆகையால் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும் முன்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

மதுரவாயல் அருகே பயங்கரம் தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி, 30 பேர் காயம்: தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி: மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன