கடலோர காவல் படை தீவிர ரோந்து; புதுச்சேரி கடற்கரை சாலையில் ஜனாதிபதி நடைபயிற்சி: அரவிந்தர் ஆசிரமத்தையும் பார்வையிட்டார்

புதுச்சேரி: புதுவை வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, அங்கிருந்து ஆரோவில் புறப்பட்டு சென்றார். புதுவைக்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மதியம் ஜிப்மரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணக்கு விநாயகர் கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். அவருடன் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் சாமி கும்பிட்டனர். அதைத் தொடர்ந்து புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு சென்றார். அங்கு சுற்றுலாத்துறை சார்பில் தெருக்கூத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், மாகே கெண்டை மேம், பாவைக் கூத்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்தார். பின்னர் அங்கிருந்த கைவினை பொருட்களை பார்வையிட்டு ரசித்த ஜனாதிபதி மணல் சிற்பம், ரங்கோலி கோலம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து அங்கிருந்து திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தாிசனம் செய்து கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து கங்கா ஆரத்தியை வழிபட்டார். அங்கிருந்து திரும்பிய ஜனாதிபதி அபிஷேகப்பாக்கத்தில் திடீரென காரை நிறுத்தி கீழே இறங்கி சாலையோரம் காத்திருந்த சிறுவர்களுக்கு சாக்லெட் வழங்கினார். அப்போது சிறுவர்கள், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். இரவு கடற்கரை சாலை நீதிபதிகள் குடியிருப்புக்கு திரும்பிய ஜனாதிபதிக்கு, 8 மணியளவில் கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் விருந்து அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் கடற்கரை சாலைக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு நடைபயிற்சி மேற்கொண்டார். இதையொட்டி அதிகாலை 4 முதல் 7 மணி வரையிலும் கடற்கரை சாலை மூடப்பட்டு இருந்தன. அதிகாலை 5.30 மணி முதல் 6.20 வரை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த சில துப்புரவு பணியாளர்களை சந்தித்து பேசினார். இதன் பின் ஜனாதிபதி முர்மு 9.15 முல் 9.45 மணி வரை அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு அரவிந்தர் ஆசிரமம் புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து 11.15 மணிக்கு ஆரோவில் மாத்ரி மந்திரிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மாத்ரி மந்திரை பார்வையிட்டபின் மதிய உணவு சாப்பிடுகிறார். பிற்பகல் 2.45 முதல் 4 மணி வரை நடைபெறும் ஆரோவில் கண்காட்சி, கருத்தரங்கில் பங்கேற்கும் ஜனாதிபதி மாலை 4 மணியளவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைந்து அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதையொட்டி புதுச்சேரி, தமிழக எல்லைகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோரிமேடு, கனகசெட்டிகுளம் எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் முக்கிய சாலைகளை அடைத்து விட்டனர். ஜனாதிபதி வருகையால் 2வது நாளாக கடலோர காவல் படையும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்தன.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்