எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென கழன்று ஓடிய 3 பெட்டிகள்

திருச்சி: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.25 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 22 பெட்டிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணிக்கு சென்னை புறப்பட்ட இந்த ரயில், திருச்சிக்கு நேற்று அதிகாலை 1.25 மணிக்கு முதலாவது நடைமேடைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில், ரயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு பெட்டியான எஸ்2- எஸ்1 இடையே இருந்த இணைப்பு சங்கிலி திடீரென அறுந்தது.

இதனால் எஸ்1 பெட்டி மற்றும் அதன்பின் இருந்த 2 முன்பதிவில்லா பெட்டிகள் எதிர்பாராத விதமாக நடுவழியில் கழன்று நின்றது. ரயில் சிறிது தூரம் மற்ற பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பெட்டிகளை விட்டு கிழே இறங்கினர். கார்டு கொடுத்த தகவலின் பேரில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பொன்மலை பணிமனையிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்து வந்து ரயில் பெட்டியை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நாட்டை உலுக்கிய மருத்துவர் பலாத்கார கொலை; ஜூனியர் டாக்டர்களின் 42 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது: நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!

அனைத்தும் கட்டுக்கதை… கடவுளின் பெயரால் அரசியல்; சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை திசை திருப்பவே லட்டு சர்ச்சை: ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு