சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை விரைவில் சந்திப்பேன்: சென்னை கருத்தரங்கில் ராமதாஸ் தகவல்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்திக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். பாமக சார்பில் ‘சமூக நீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. கருத்தரங்கிற்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: சுதந்திரத்திற்கு முன்பு நாட்டில் 100 சதவீத இடஒதுக்கீடு இருந்தது. இதன்மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது. 1941ம் ஆண்டு 2ம் உலக போரை காரணம் காண்பித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதை தொடர்ந்து, இதே காரணம் காண்பித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. தற்போது ஒன்றிய அரசிடம், மாநில அரசு முறையிடுவது, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். அதே கோரிக்கைக்காக அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினை விரைவில் சந்திப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, அன்புமணி பேசியதாவது: சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் உடனடியாக சமூக நீதியை நிலை நாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அன்றே, தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும். நாங்கள் ஒரு சாதிக்காக மட்டும் கோரிக்கை விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளின் நிலை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளவே வலியுறுத்துகிறோம். புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008ன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றார். இதில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஒன்றிய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, இந்திய கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அசோக் வரதன் ஷெட்டி, பாமக வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்பி செந்தில், வழக்கறிஞர் பாலு, தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

நாட்றம்பள்ளி அருகே முன்விரோத தகராறில் மாட்டிற்கு வெடி வைத்து, கொட்டகைக்கு தீ வைப்பு

சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது, எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி : அண்ணாமலை

கால்நடை பண்ணை அமைக்க கடன் உதவி அளிக்க முடிவு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்