சிஎம்டிஏ அறிவிப்புகள் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவையில் சி.எம்.டி.ஏ.வில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலக கூட்டரங்கில் சி.எம்.டி.ஏ தலைவரும், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274வது குழுமக் கூட்டம் நடந்தது.

இதில், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொதுமக்களின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், சென்னை தீவு திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேபோல, 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்