முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது

சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாஜ சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜ தேசிய துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். இக் கூட்டத்தில் பாஜ வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் பேசியபோது, தமிழக முதல்வர் குறித்து அவதூறான கருத்துகளை கூறினார்.

இது குறித்து பெரவள்ளூர் போலீஸ் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தது. சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் நேற்று காலை பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி வியாசர் நகர் 7வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கபிலனை கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். யார் இந்த கபிலன்: கைது செய்யப்பட்ட பாஜ மாவட்ட தலைவர் கபிலன் முன்பு தன்னுடன் சிலரை வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, வண்ணாரப்பேட்டையில் ஒரு கடையில் இவர் பஞ்சாயத்து செய்யும்போது வியாபாரிகள் இவரை சூழ்ந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜவில் சேர்ந்தார். அதன்பின்பு, பாஜவில் மாவட்ட தலைவரானார். இந்நிலையில், பாஜவில் ஏற்கனவே இருந்த பழைய நிர்வாகிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், பணத்தை வாங்கிக்கொண்டு தகுதி இல்லாத நபர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியதாகவும் தொடர்ந்து கபிலன் மீது புகார்கள் எழுந்தன.

குறிப்பாக சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் கபிலன் மூலமாகவே கட்சிக்குள் நுழைந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும், மாமன்ற தேர்தலின்போது, இவரது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற வேட்பாளராக நின்ற திருநங்கை ரதி என்பவர் கபிலன் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், இவரது ஆதரவாளர்கள் திருநங்கைக்கு மிரட்டல் விடுத்ததால் அவர் வழக்கை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாஜ மாவட்ட தலைவர் கபிலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்