வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்

சிம்லா: கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த பலத்த மழையால் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டன. அதே போல் ஒரு மேக வெடிப்பு இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டது. இமயமலை பிரதேசமான சிம்லா மாவட்டத்தில் உள்ள சமேஜ் குத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. இதனால் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் மாயமாகி உள்ளனர். மலானா நீர்மின்திட்டம் பகுதியில் சிலர் சிக்கியுள்ளனர். இதேபோல் மண்டி மாவட்டத்தின் பதாரில் உள்ள தலதுகோட் பகுதியிலும் நள்ளிரவு மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. குலு மாவட்டத்தில் 9 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மணலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து முடங்கி விட்டது. பியாஸ் ஆற்றின் நீர் பாண்டோ பகுதியில் பல வீடுகளில் புகுந்தது. இதனால் இந்த பகுதியில் பலரை காணவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர், போலீசார் மற்றும் ஊர்காவலர் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை டிரோன் மூலமாக தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. 13 இடங்களில் மாநில அவசர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோர் முதல்வர் சுக்விந்தர் சிங்கை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தனர். தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து தரும் என்றும் அவர் உறுதியளித்துள்ளனர்.

5 இடங்களில் மேகவெடிப்பு
இமாச்சலில் ஒரே நேரத்தில் குலுவில் உள்ள நிர்மந்த், சைஞ்ச், மலானா பகுதிகளிலும், மண்டியில் உள்ள பதார், சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் மேக வெடிப்பு நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்