தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் சிறுமியிடம் பேச்சு கொடுத்து ₹15 ஆயிரம் திருட முயற்சி: 20க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய கொள்ளைக்காரி கைது

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் துணி எடுக்க வந்த சிறுமியிடம் ரூ.15 ஆயிரத்தை திருட முயன்ற பிரபல கொள்ளைக்காரி தில் சாந்தியை போலீசார் கைது செய்தனர். சென்னை தண்டையார்பேட்டையை ேசர்ந்தவர் உஷாராணி (43). இவர், நேற்று தனது குடும்பத்துடன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடைக்கு வந்தார். அப்போது பணம் வைத்திருந்த பையை தனது மகள் பரணி ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு துணிகளை பார்த்து கொண்டிருந்தார். இதை பார்த்த ஒரு பெண், அரை மணி நேரமாக சிறுமியுடன் பேச்சு கொடுத்தப்படி பின்தொடர்ந்தார். பின்னர் திடீரென சிறுமியிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வைத்திருந்த பையை திருடி செல்ல முயன்றார். உடனே தாய் உஷாராணியிடம் கூறினார். அடுத்தகணமே உஷாராணி சத்தம் போட்டு கடைக்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் பையை திருடிய பெண்ணை பிடித்தனர்.

பின்னர் மாம்பலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை திருடும் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளைக்காரியான சாந்தி (எ) தில்சாந்தி என தெரியவந்தது. இவர் மீது மாம்பலம், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தில் சாந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் வைத்திருந்த பையை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ராகுல் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்த எம்.எல்.ஏ மீது வழக்கு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,920 க்கு விற்பனை..!!

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி.