ஆலை கழிவுநீரால் மாசடைந்து வரும் பொய்யேரி போராட்ட அறிவிப்பால் குழாய்கள் அடைப்பு

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே ஆலை கழிவுநீரால் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொய்யேரி மாசடைந்துள்ளது. பொதுமக்களின் போராட்ட அறிவிப்பையடுத்து ஆலை நிர்வாகம் ஏரிக்கு செல்லும் கழிவுநீர் குழாய்களை அடைத்தது.பள்ளிபாளையம் அருகே மோடமங்கலத்தில், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பொய்யேரி அமைந்துள்ளது. மோடமங்கலம் அக்ரஹாரம், அமானி, படைவீடு, சௌதாபுரம் ஆகிய கிராமங்களின் எல்லைப்பகுதியான இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஊராட்சி மூலம் ஏரி குத்தகைக்கு விடப்பட்டு மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த ஏரியில் தேங்கியுள்ள நீரால் அப்பகுதியில் உள்ள கிணறுகளுக்கு நீர் ஊற்று கிடைத்து வந்தன. இந்நிலையில், ஏரியின் கரைப்பகுதியில் 10 ஆண்டுக்கு முன்பு 2 நூற்பாலைகள் துவங்கப்பட்டது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் ஏரியில் விடப்பட்டதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்நிலையில், ஆலைகளின் கழிவுநீரை ஏரியில் வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சான்றோர் மக்கள் கட்சியினர், பொதுமக்களை திரட்டி காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

போராட்டம் குறித்து அறிந்த ஆலை நிர்வாகம் ஏரிக்கு செல்லும் கழிவுநீர் குழாய்களை அடைத்துக்கொண்டது. இனிமேல் கழிவுநீர் வெளியேறாது என அதிகாரிகளிடம் உறுதியளித்தது. ஆனால் பாழான ஏரி நீரை வெளியேற்றி அங்குள்ள கழிவுகளை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும், ஏரி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரி காத்திருப்பு போராட்டத்திற்கு அப்பகுதியினர் முற்பட்டனர். இதுதொடர்பாக ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் மணிவண்ணன், பிடிஓ கஜேந்திரபூபதி, எஸ்ஐ மலர்விழி, விஏஓக்கள் ரஞ்சித், சங்கர் மற்றும் ஆலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலையிலிருந்து கழிவுகள் இனி வெளியேறாது என நிர்வாகிகள் உறுதியளித்தனர். மாசடைந்த நீரை வெளியேற்றவும், தூர்வாரி கரையை பலப்படுத்தவும் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் பேசி முடிவினை 2 நாட்களில் அறிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதையடுத்து, காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக போராட்ட குழு அறிவித்தனர்.

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்

பொய்யேரி மாசுபடுத்தப்பட்டது தொடர்பாக போராட்ட குழு தலைவர் சான்றோர் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ஆலை கழிவுநீரால் பாரம்பரிய மிக்க ஏரி மாசடைந்துள்ளது. கிணறுகளுக்கான ஊற்றுக்கண்களும் தூர்ந்து அடைத்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி நீரை ஆலை நிர்வாகம் தனது செலவில் வெளியேற்றி, தூர்வாரி கரைகளை வலுப்படுத்த வேண்டும். 2 நாட்களில் இது குறித்து அதிகாரிகள் நல்ல முடிவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தீர்வு கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி