வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது நோட்டமிட்டு மூதாட்டியை கொன்று நகை பறிப்பு: சிசிடிவி பதிவால் சிக்கிய வாலிபர்

பெரம்பூர்: வியாசர்பாடியில் கழுத்தை இறுக்கி மூதாட்டியை கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தாயுடன் வீட்டை சுத்தம் செய்ய வந்தபோது நோட்டமிட்டு வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வியாசர்பாடி வியாசர் நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (82). ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரோஜினிபாய் (78). இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு கற்பகம் (51), கலைவாணி லட்சுமி (42) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் கற்பகம் மூலக்கடை பகுதியிலும், கலைவாணி லட்சுமி பெரம்பூர் வீனஸ் பகுதியிலும் தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நாகராஜன் வீட்டின் உள்ளே தனது அறையிலும், சரோஜினிபாய் ஹாலிலும் இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து நாகராஜன் தனது ரூமில் இருந்து வெளியேவந்து பார்த்தபோது, ஹாலில் இருந்த சோபாவில் சரோஜினிபாய் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். அவரது கழுத்தை சார்ஜர் வயர் சுற்றி இருந்துள்ளது. மேலும் காது அறுபட்ட நிலையில் இருந்துள்ளது. பின்னந் தலையிலும் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது சரோஜினிபாய் உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனடியாக அவரது சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் திருவிக நகர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தார். மேலும் மோப்பநாய் ஷீபா அங்கு வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர் அமலாவும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை மாதிரிகளை சேகரித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சரோஜினி-நாகராஜன் தம்பதி தங்கள் வீட்டை சுத்தம் செய்ய 3 பேரை அழைத்துள்ளனர். அவர்கள் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ளனர்.

அதற்கு ரூ.2500 கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சுத்தம் செய்ய வந்தவர்களில் கொருக்குப்பேட்டை பாளையம் 8வது தெருவைச் சேர்ந்த மங்கம்மாள் (51) என்பவர் தொடர்ந்து அழைத்ததன் பேரில் அடிக்கடி இவர்களது வீட்டை சுத்தம் செய்துள்ளார், என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மங்கம்மாளின் மகன் ஜீவா (எ) முரளி (34) என்பவர் நாகராஜன் வீட்டிற்கு சம்பவம் நடந்த நேரத்தில் வந்து சென்றது பதிவாகி இருந்தது. நேற்று அவரை பிடித்து விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல் வெளியானது.

சரோஜினிபாய் வீட்டுக்கு அவ்வப்போது தனது தாயாருடன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் முரளி ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது வயதான தம்பதி இருவரும் தனிமையில் இருப்பதை அவர் நோட்டமிட்டுள்ளார். மேலும் அவர்களிடம் பணம், நகை இருப்பதையும் தெரிந்துகொண்டார். பின்னர் சம்பவத்தன்று சரோஜினி பாய் வீட்டிற்கு சென்ற முரளி, கத்தி முனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளார். அதற்கு சரோஜினி பாய் மறுக்கவே அங்கிருந்த செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி, அவரது காதில் இருந்த ஒரு தங்க கம்மலை மட்டும் முரளி கழற்றி எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து முரளியை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி

பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம்

திமுக போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்