Sunday, September 8, 2024
Home » குட்டிக் குட்டி க்ளே கியூட்டீஸ்!

குட்டிக் குட்டி க்ளே கியூட்டீஸ்!

by Porselvi

இன்ஸ்டாகிராமின் பிரவுசரில் பல வீடியோக்களுக்கு இடையில் சட்டென கண்ணில் பட்டது ஒரு குட்டி கியூட் மஞ்சள் கவுன் கேர்ள், தொடர்ந்து அழகான சூனியக்கார பொம்மை, நவராத்திரி அம்மன், ஃபிளவர் கேர்ள், கடல்கன்னி, குட்டிக்குட்டி டெட்டி பியர்கள், பொம்மைகள், கிறிஸ்துமஸ் எல்ஃப்ஸ்கள் என அத்தனையும் க்ளேவில் உருவாக்கும் வீடியோக்களாக நம்மை ஜென்னா கிராஃப்ட்ஸ் அக்கவுண்ட் ஈர்க்க ஆர்வத்துடன் பேசினோம். ‘என்னுடைய பெயர் ஜெனிபர், மாதம் ரூ. 10,000 துவங்கி ரூ. 20,000 வரையிலும் இதிலே சம்பாதிக்கிறேன். இந்தக் க்ளே கூட என்னுடைய சொந்தத் தயாரிப்புதான்’… உற்சாகமாகப் பேசினார் ஜென்னா கிராஃப் உரிமையாளர் ஜெனிபர். சொந்த ஊர் கோயம்புத்தூர், இப்போது பெங்களூருவில் செட்டில் ஆகிட்டோம். நான் எம்.சி.ஏ படிச்சிருக்கேன், படிச்சிட்டு ஐடியில் வேலை செய்திட்டு இருந்தேன். ஆனால் தொடர்ந்து திருமணம் காரணமாக வேலையை விட்டுவிட்டேன். சென்னையில் சில காலம் இருந்த வேளை அப்போது வேலைக்கு முயற்சி செய்திட்டு இருந்தேன். ஆனால் குழந்தைப் பேறு, டெலிவரி இப்படி பெரிய இடைவேளை ஆகிட்டதால் திரும்ப வேலையில் சேர்வது கடினமாகிடுச்சு. தொடர்ந்து என்னுடைய கணவர் பிரெட்ரிக் நோபிளுக்கு பெங்களூருவில் வேலை கிடைக்க அங்கே செட்டில் ஆகிட்டோம். தொடர்ந்து ரெண்டு மகள்கள், டெஸ்னா, ஹன்னா. அவங்களைப் பார்த்துக்கவே நேரம் சரியாக வேலைக்கு போறதெல்லாம் சாத்தியமே இல்லாம ஆகிடுச்சு’ என்னும் ஜெனிபர் ஜென்னா கிராஃப்ட்ஸ் உருவான கதையைப் பகிர்ந்தார்.

‘சின்ன வயதில் இருந்தே இந்த கிராஃப்ட் ஐட்டங்கள் மேல ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் சின்னச் சின்ன கிராஃப்ட்களா செய்திட்டு இருந்தேன். இதுதான் பாதை என்கிற எந்தத் திட்டமும் கிடையாது. ஏதேதோ கிராஃப்ட் ஐட்டங்கள் செய்திட்டு இருந்தேன். பெரும்பாலும் அதில் க்ளே புராடெக்ட்கள். அப்பறம் தான் இந்த க்ளே பொம்மைகள் செய்ய கூகுளில் புகைப்படங்கள் எல்லாம் தேடும் போது அதிகமா இந்த அனிமேட்டட் கேர்ள் பொம்மைகள் நிறையப் புகைப்படங்களில் இருக்கறதைக் காண முடிஞ்சது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் வேளையிலே அதைச் சார்ந்த சில பொம்மைகளும் பதிவேற்ற செய்ய நிறைய பேர் செய்து தர முடியுமான்னு ஆர்டரா கேட்க ஆரம்பிச்சாங்க. இன்னொரு புறம் என்ன நான் உருவாக்கினாலும் அதை அப்படியே வீடியோவாக்கி யூடியூப், இன்ஸ்டாகிராம், முகநூல் இங்கேயெல்லாம் அப்லோடு செய்தேன். அதன் மூலமும் வருமானம் வர ஆரம்பிச்சது. 30,000 சப்ஸ்கிரைபர்கள் கிடைச்சாங்க. ஏன் இந்த சின்னச் சின்ன கேர்ள் பொம்மைகள் கான்செப்ட்டை அதிகமா செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. அப்படித்தான் இந்தக் குட்டி பொம்மைகள் அதிகமா செய்ய ஆரம்பிச்சேன். மேலும் பண்டிகைகள், சிறப்பு நாட்கள் வந்தால் அதற்கேற்ப பொம்மைகளும் கூட உருவாக்கி வீடியோக்கள் ஷேர் செய்தேன். இதனால் அக்கவுண்ட் கொஞ்சம் பிரபலமாக ஆரம்பிச்சது’ இந்தக் க்ளே தன்னுடைய சொந்தத் தயாரிப்பு எனவும், அதற்கான வாடிக்கையாளர்கள் இன்னும் அதிகம் என்கிறார் ஜெனிபர்.

‘இந்தக் க்ளே என்னுடைய சொந்தத் தயாரிப்பு, ஆரம்பத்தில் கார்ன் மாவு கொண்டுதான் உருவாக்கினேன். மற்ற கடைகளில் கிடைக்கும் க்ளே மாதிரி கடினமா இல்லாம, எவ்வளவு நுணுக்கமாகவும் பொம்மைகள் செய்ய ஏதுவாக லேசானதாக இருக்கும். நிறைய சோதனைகள், பயிற்சிகள், முயற்சிகள் கடந்துதான் இந்தக் க்ளே எனக்கு சாத்தியமாச்சு. அதுவும் கூட யூடியூப் வீடியோக்கள் மூலமாதான் கத்துக்கிட்டேன். ஆரம்பத்தில் என்னதான் பக்குவப்படுத்தி கொடுத்தாலும் பூஞ்சைகள் வந்திடுதுன்னு நிறைய பேர் புகார் சொன்னாங்க. இப்படி எல்லாமே வாடிக்கையாளர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில்தான் இந்தக்ளே உருவாக்கினேன். இந்தக் க்ளே ஆரம்பத்தில் வீட்டு ஸ்டவ்வில் தான் செய்தேன், ஆனாலும் சரியா வரலை. அதற்கெனவே ஒரு மெஷின் என் கணவர் வாங்கிக் கொடுத்தார். இப்போ பொம்மைகளைக் காட்டிலும் க்ளே விற்பனைதான் அதிகமா இருக்கு. தொடர்ந்து வகுப்புகள் எடுக்கற திட்டமும் இருக்கு. அதற்கு முன்பு க்ளேவை மக்கள் கிட்ட கொண்டு போகணும். 250 கிராம், ரூ.280க்கு விற்கறேன். அதில் நான் செய்கிற பொம்மைகள் போல் மூன்று பொம்மைகள் செய்யலாம். எனக்குப் பக்க பலமா என் கணவர் மற்றும் குடும்பம் இருக்காங்க. அதனால்தான் என்னால் நேரத்தை ஒதுக்கி ஜென்னா கிராஃப்ட்ஸ் புராடெக்ட்களை வெற்றி கரமா செய்ய முடியுது’ தன்னம்பிக்கை யுடன் பேசுகிறார் ஜெனிபர்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

15 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi