முதல்வர், அமைச்சர்களுடன் மோதல் எதிரொலி புதுச்சேரிக்கு புதிய தலைமை செயலர் நியமனம்: ஆளுநரின் செயலாளர், கலெக்டரும் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி: கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரியின் தலைமை செயலாளராக ராஜீவ் வர்மா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற சில மாதங்களில் ஆளும் அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோப்புகள் அனுப்பினால், விரைந்து ஒப்புதல் தராமல் வைத்துக்கொள்வதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். ஆளும் அரசுடன் அடிக்கடி ஏற்பட்ட மோதலை துணைநிலை ஆளுநர் தமிழிசை பல கட்டங்களில் அழைத்து பஞ்சாயத்து செய்தும், சமரசம் ஏற்படவில்லை. எனவே தலைமை செயலாளரை மாற்ற வேண்டுமென ஒன்றிய அரசிடம் முதல்வர், அமைச்சர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

முதல்வருக்கு தெரியாமல் செயலாளருக்கு இலாகா ஒதுக்கிய விவகாரத்தில் ராஜீவ் வர்மாவை நேரில் அழைத்து எம்எல்ஏக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். இதனால் ராஜீவ் வர்மாவை தலைமை செயலர் பொறுப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.  இந்தநிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாசல பிரதேசத்தில் பணியாற்றி வந்த சரத் சவுகானை, புதுச்சேரி தலைமை செயலாளராக நியமித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ராஜீவ் வர்மா 1 ஆண்டுகள், 10 மாதம் தலைமை செயலர் பொறுப்பில் இருந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிசிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று, ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று புதுச்சேரி கலெக்டராக நீண்ட காலம் பணியாற்றி வந்த வல்லவன், கோவா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று ஆளுநரின் செயலராக பணியாற்றி வந்த அபிஜித் விஜய் சவுத்ரி சண்டிகருக்கு மாற்றப்பட்டு அந்த பதவிக்கு தல்வாடே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், அருணாசல பிரதேசத்தில் பணியாற்றிவந்தார். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இருந்து புதிய ஐபிஎஸ் அதிகாரி கலைவாணனும் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலர், கலெக்டர், ஆளுநரின் செயலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், செயலாளர்களின் இலாகாவும் விரைவில் மாற்றியமைக்கும் வாய்ப்பிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கோரி அக்.8-ல் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

”உத்தமர் காந்தியடிகளின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!