கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.13 கோடி நிதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரம்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான முறையில் நவீன பேருந்து நிலையம் ரூ.394 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இதில், மேற்படி பேருந்து நிலையம் கடந்த ஆண்டு முதல் தீபாவளி, பொங்கல் பண்டிகை, மார்ச் 1ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், ஜூன் 3ம் தேதி கலைஞரின் பிறந்த நாள் மற்றும் நாளை மறுநாள் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று மேற்படி பேருந்து நிலையம் திறக்கப்படும் என அடுத்தடுத்து எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இங்கு அரை மணி நேரம் விடாமல் மழை பெய்தால் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜிஎஸ்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரு பக்கத்திலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில், மழைநீர் பாலம் அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டால் மழைக்காலங்களில் இதுபோன்று சிக்கல்கள் ஏற்படும். இதனால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதி மேற்படி பேருந்து நிலையத்தின் திறப்பு விழா தள்ளி போடப்பட்டது. இதனை அடுத்து, மழைநீர் பாலத்தை அமைத்து முடித்த பிறகு பேருந்து நிலையத்தை திறந்துகொள்ளலாம் என மேற்படி, பேருந்து நிலையத்தை அவ்வப்போது ஆய்வு செய்து வந்த அமைச்சர்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆய்வு செய்த அதிகாரிகள் கிளாம்பாக்கம் மற்றும் ஊரப்பாக்கம் கிழக்கு பகுதியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்தும் இதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழைநீர் மேற்கு பகுதியில் உள்ள கிளாம்பாக்கம் ஏரியில் சென்றடைவதற்காக சர்வே செய்தனர். பின்னர், மேற்படி பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆணையத்திற்கு அனுமதிக்காக கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், காலதாமதத்திற்கு இடையே இதற்காக ஒரு கோடியே 58 லட்சம் டெபாசிட் தொகையை செலுத்திய பின்னரே தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆணையம் அனுமதி வழங்கியது.

இதனை அடுத்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 9ம் தேதி முதல் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் 3 மீட்டர் அகலமும் ஒன்றரை மீட்டர் உயரமும் கொண்ட மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மேற்படி பணிகள் முடிந்ததும் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே அமைப்பதற்காக ஏற்கனவே கான்கிரீட்டில் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் பாலங்கள் கொண்டு வந்து சாலை ஓரத்தில் தயார் நிலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்

மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்