சிவில் சப்ளை சிஐடி பிரிவின் ராசியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காக்கித்துறையில சேதி ஏதுமிருக்கா..’’ என்ற முதல் கேள்வியோடு வந்தார் பீட்டர் மாமா. ‘‘எக்கச்சக்கம் இருக்கு.. இருந்தாலும் துறையில் நிலவும் ஒரு எதிர்பார்ப்பு சேதியை சொல்றேன். காவல்துறையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு எனப்படும் சிவில் சப்ளை சிஐடி பிரிவு இப்போ முக்கியமான துறையாக இருக்கு.. இந்த பிரிவுக்கு தலைவர்களாக வர்றவங்களுக்கு அடுத்து ஒரு பெரிய ஜாக்பாட் பதவி கிடைக்கும் என்பது இங்கு பொதுவான நம்பிக்கையாக இருக்கு.. உதாரணமாக, சுனில்குமார் டிஜிபி சிவில் சப்ளை சிஐடி பிரிவு தலைவராக இருந்தார்.

ஓய்வுபெற்றவுடன் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்காரு.. தொடர்ந்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவரானார். இதேபோல் சைலேந்திரபாபு டிஜிபி சிவில் சப்ளை சிஐடி பிரிவு தலைவராக இருந்தார். அதற்கு அடுத்து தான் அவருக்கு சட்டம் -ஒழுங்கு டிஜிபி பதவி கிடைச்சது.. சிவில் சப்ளை சிஐடி தலைவராக அருண் ஏடிஜிபி இருந்தார். இதை தொடர்ந்து ஆவடி கமிஷனர் ஆனார். பின்னர் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தார். இப்போது சென்னை மாநகர கமிஷனராக இருக்கிறார்.

தற்போது சீமா அகர்வால் டிஜிபி சிவில் சப்ளை சிஐடி பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற உள்ளார். அடுத்து யார் டிஜிபியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துருக்கு.. சீமா அகர்வாலும் டிஜிபி ரேஸில் உள்ளார். சிவில் சப்ளை ராசி அவருக்கு கைகொடுக்குமா என்பதுதான் காவல்துறை வட்டார பேச்சாக இப்போது இருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தொலைநிலை கல்வி நிலையத்தில் மாணவர்களிடம் வசூலிக்கும் பணத்திற்கு போலி ரசீது கொடுத்து லட்சக்கணக்கில் முறைகேடு நடந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தூங்கா நகர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி, சம்பள பிரச்னை ஆகியவற்றில் சிக்கி தவிக்கும் நிலைக்கு காரணமே ஊழல், முறைகேடுதான்னு பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதை நிரூபிப்பதைப்போல மீண்டும் ஒரு முறைகேடு விவகாரம் புயலை கிளப்பி வருது.. அதாவது, தொலைநிலை கல்வி தற்போது பல்கலைக்கழகத்திற்கே தொல்லை நிலை கல்வியாக மாறி வருகிறதாம்.. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பேராசிரியர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை தனிநபர் வங்கி கணக்கில் வரவு வைத்ததாக புகார் எழுந்தது..

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே தொலைநிலை கல்வி நிலையத்தில் மாணவர்களிடம் வசூல் செய்யும் பணத்திற்கு போலியாக ரசீது கொடுத்துவிட்டு, அந்த பணத்தை அபேஸ் செய்யும் வேலையும் நடந்தது வெளிச்சத்திற்கு வந்துருக்கு.. சில ஆயிரத்தில் துவங்கிய இந்த முறைகேடு தற்போது பல லட்சம் வரை போயுள்ளதாம்.. முறையான தணிக்கைக்கு பிறகுதான் முறைகேடு எவ்வளவு என்பதே தெரிய வருமாம்.. பல்கலைக்கழக வட்டாரங்களில் தற்போது இதுதான் ஹாட் டாபிக் ஆக போய்க்கிட்டிருப்பதாக தகவல்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘புகார் மனுவோட போனா பஞ்சாயத்து பேசியே கறக்க வேண்டியது கறந்துவிடுறாங்களாமே லேடி காக்கிகள் நிலையத்துல..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் சிட்டியில லேடிஸ்க்கான காக்கிகள் நிலையம் இருக்குது.. அங்க பணிபுரிஞ்சு வர்ற 3 ஸ்டார் காக்கி பஞ்சாயத்துக்கு பெயர் போனவராம்.. ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டாராம்.. யார் மேல புகார் கொடுக்குறாங்களோ, அவங்களை நேர்ல அழைச்சி அவங்ககிட்ட இருந்து கறக்க வேண்டியதை கறந்துவிடுவாராம்..

அதேபோல பாதிக்கப்பட்டவங்க கிட்ட இருந்தும் கறக்க வேண்டியதை கறந்து பஞ்சாயத்து பேசி அனுப்பி வெச்சிடுவாராம்.. இப்படி போன வாரமும் அந்த காக்கிகள் நிலையத்துல ஒரு பஞ்சாயத்து நடந்திருக்குது.. அதை பார்த்துட்டு, புகார் மனுவோட வந்த இன்னொருத்தரு, நேரா, மாவட்ட தலைமை காக்கி ஆபிசுக்கே போய் நான் புகார் கொடுத்துக்குறேன்னு கிளம்பிட்டாராம்.. இதுபோல நிறைய புகார்கள் மாவட்ட காக்கி ஆபிசுக்கு போகுதாம்.. எனவே மாவட்ட காக்கி அதிகாரி இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூகத்தோட ஆர்வலருங்க கோரிக்கை வெச்சிருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பிரசித்தி பெற்ற கோயிலுக்கு பக்தர்கள் வருவது அதிகரித்ததை வைத்து, தனியார் டிரஸ்ட் பண வசூலில் ஈடுபடுவது பக்தர்களிடம் முணுமுணுப்பு ஏற்படுத்தியிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆன்மிகத்துக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் புதிதாக பிரசித்தி பெற்ற கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதாம்.. இதை காரணமாக வைத்து களத்தில் இறங்கியுள்ள ஒரு டிரஸ்ட் அமைப்பு இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் பிரமாண்ட சிலையை வடிமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம்..

இப்பணியை சமீபத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒருவர் தொடங்கி வைச்சிருக்காரு.. ஆனால் முதல்வரான புல்லட்சாமியோ அல்லது சம்பந்தப்பட்ட ஆன்மிக துறையின் முக்கிய அதிகாரியோ கலந்துகொள்ளாத நிலையில், இப்பணிக்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு, இவை எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதற்கான முழு விவரம் தெரிய வராத நிலையில், பக்தர்களிடம் இப்போதே புலம்பல் எழுந்துள்ளதாம்..

பொதுமக்களிடம் இருந்து ஒரு தனியார் டிரஸ்ட் பண வசூலிக்கிறதென்றால் அரசும், சம்பந்தப்பட்ட துறையும் கண்களை மூடிக் கொண்டு இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ள சமூக ஆர்வலர்களின் ‘கோயில் சொத்து… குல நாசம்…’ என்ற முணுமுணுப்பு மட்டுமின்றி ஆன்மிகம் பெயரில் அடாவடி செய்வதான்னு புல்லட்சாமி தரப்பும் பொரிந்து தள்ளுகிறார்களாம்.. இதுதான் தற்போதைய புதுச்சேரி ஹைலைட்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை