தொழிலாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: மறைமலைநகர் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் பணி நீக்கத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் தொழிற்பேட்டையில் டீஜங் மோபார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தென் கொரிய நாட்டைச் சேர்ந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி ஊதிய உயர்வு கேட்டதற்காக கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 22 தொழிலாளர்களை நிர்வாகத்தினர் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்தனர்.

வேலை நீக்கம் செய்த பிறகு உள்விசாரணை நடைபெறும் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பிழைப்பூதியத்தை அவர்கள் வழங்கவில்லை. பிழைப்பூதியம் கேட்டு தொடர்ந்த வழக்கிலும் இந்த நிர்வாகம் ஆஜராகவில்லை. முறையாக சம்பள தேதி அன்று சம்பளத்தை வழங்காமல் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி சம்பளத்தை கேட்டதற்காக மேலும் 28 தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்து விட்டனர்.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து நிரந்தர தொழிலாளர்களையும் வேலை நீக்கம் செய்துவிட்டு, தற்போது ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தையும் செலுத்தாமல் வஞ்சித்து வருகிறது.

இதில், பாதிக்கப்பட்ட 50 தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் ஆட்டோ தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சம்பத் தலைமையில் சிங்கப்பெருமாள் கோவில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சேஷாத்திரி, சிஐடியு நிர்வாகிகள் செல்வராஜ், நடராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது