தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் பரபரப்பு


கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊரப்பாக்கம், ஆதனூர், தைலாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அடிக்கடி தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள மின்வாரியத்திற்கு திரண்டு சென்று இரவு 9.30 மணி அளவில் நிறுத்திய மின்சாரம் நள்ளிரவு 12 மணி ஆகியும் இதுவரை வரவில்லை என்று கூறி அங்குள்ள ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மின் வாரியம் எதிரே ஜிஎஸ்டி சாலைக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மின்சாரத்தை வரவைப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை அடுத்து, அதிகாலை 2.30 மணி அளவில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், நள்ளிரவில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு