நட்பு வட்டமும் நல்லோர் வட்டமும்

இன்றைய மாணவர்களுக்கு எல்லா திசைகளிலும் நண்பர்கள் நிரம்பி வழிகிறார்கள்.‌ இன்ஸ்டாவில் இரண்டாயிரம் நண்பர்கள், முகநூலில் மூவாயிரம் நண்பர்கள் என்று குவிந்திருக்கிறார்கள்.‌ ‘தனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது, என்று சொல்லிக்கொள்வதைப் போலச் சமூகவலைத்தளப் பக்கத்தில் தனக்கு இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படுகிற ப்ரஸ்டீஜ், ஸ்டேட்டஸ் விஷயமாக மாணவர்களுக்கு நட்பு மாறியிருக்கிறது. இந்த நண்பர்களால் ஏதேனும் பெரிய மாற்றங்கள், ஏற்றங்கள் உருவாகுமா?‌ என்றால் விடை பெரிய கேள்விக்குறிதான்.‌

அருகில் இருந்து நெருங்கிப் பழகி, பேசிச் சிரித்து, சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு தேவையான சமயத்தில் ஆலோசனைகள் வழங்கி உதவும் நேர்முக நட்பைப் போல இணையவழி நட்புகள் இருப்பதில்லை என்பது வைரலான உண்மை.

உடனிருந்து உற்சாகப்படுத்தி உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் உயிரோட்டமான உறவு இணையவழி நட்புகளில் வாய்ப்பதில்லை என்றாலும், மாணவர்கள் இணையத்தைச் கட்டிக் கொண்டு புரள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை.

எப்படிப்பட்ட நண்பர்கள் அமைகிறார்களோ அப்படித்தான் ஒருவனின் வாழ்க்கை அமைகிறது என்பது ஆழமான தத்துவம். தொடக்க நிலைப் பள்ளிகளில் தொடங்கும் நட்பு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கி கல்லூரிப் பருவத்தில் தொடரும் நட்பு ஒரு மாணவனின் வாழ்க்கையை முன்னும் பின்னுமாக மாற்றிப் போடக்கூடியது. அது ஒரு ஊட்டச்சத்து மாத்திரை, உற்சாக டானிக் உடலுக்கு வலிமை தரும் வைட்டமின், எல்லாவற்றையும் தாண்டி நட்பு என்பது நோய் நீக்கும் மருந்து.

நட்பு என்பது இருவருக்கிடையே இயல்பாக உருவாக வேண்டும். ஒரு நண்பன் இயல்பாக நமக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் கூட, சில சமயங்களில் நமக்கு அமைகிற நண்பர்களிடம் சில கெட்ட குணங்களைப் பார்க்கும்போது அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாம். அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களிடம் இருந்து விலகி நல்ல குணமுடைய நண்பர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

ஹாஸ்டல் பிரண்ட்ஷிப்

எல்லோருக்கும் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழல் உருவாவதில்லை. ஆனாலும் தற்போது பெரும்பாலான மாணவர்கள் ஊர்விட்டு ஊர் சென்று ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் சூழல் உருவாகிவிட்டது. உடலின் மற்ற பாகங்களிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு மாதிரி ஹாஸ்டல் வாசத்தின்போது ஏற்படும் நட்பு மிக முக்கியமானது. அந்த நரம்பு பாதிக்கப்பட்டால் மூளை வளர்ச்சி குன்றி, வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிடும். ‘இந்த வயசில் அனுபவிக்காமல் வயசான பிறகு இதெல்லாம் அனுபவிக்க முடியுமா?’ என்ற வசனம்தான் வாழ்க்கைத் திரைப்படத்தின் மோசமான திருப்புமுனையாகப் பலருக்கு அமைந்துவிடுகிறது. அப்போது விளையாட்டாகத் தொடங்கும் சிறிய கெட்ட பழக்கம் வாழ்நாள் முழுவதும் ஆக்கிரமித்து ஒருவனை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. விடுதியில் சேரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.‌ ஒருவேளை நண்பர்கள் தவறான பழக்கங்களுடன் இருந்தால் அவர்களிடம் இருந்து விலகி நிற்பதே சரியானது. அதே சமயம் ஹாஸ்டலில் ஏற்படும் நட்பு பலருக்கு உயர்வையும் கொடுத்திருக்கிறது. ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் ஒரேவிதமாக போட்டித் தேர்வுக்குத் தயாராகி அத்தனை பேரும் தேர்ச்சி பெற்று அரசு வேலைக்குச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன என்பது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

கல்லூரிக் கால நட்பு:

ஹாஸ்டல் நட்பு போலவே கல்லூரி நட்பும் முக்கியமானது. ஹாஸ்டல் நட்பு என்பது மூளைக்குச் செல்லும் நரம்பு என்றால் கல்லூரி நட்பு இதயத்தின் தசைகள் போன்றவை. வாழ்க்கையின் சீரான இயக்கத்திற்கு உதவுபவை. கல்லூரிக் கால நண்பர்கள் காலம் முழுவதும் உடன் வருபவர்கள், வயதான காலத்தில் ஊன்றுகோலாகப் பயன்படும் கைத்தடி போன்றவர்கள். நாம் செய்யும் தொழில், வேலை, சேவை ஆகியவற்றில் உடனிருந்து ஆலோசனை தருபவர்கள். மிகவும் பலம் வாய்ந்த நட்பாக அமையக்கூடியது கல்லூரி காலத்தில் ஏற்படும் நட்பு.

ஆண் பெண் நட்பு:

மேல்நிலைப்பள்ளி பருவம், கல்லூரி பருவம், கல்லூரி முடித்து திருமணத்திற்கு முன்பான பருவம் ஆகிய காலகட்டங்களில் ஏற்படும் ஆண்-பெண் நட்பு என்பது இறுதி வரை நட்பாகவே நீடிப்பதில்லை என்பது கசப்பான உண்மைதான். ஆண் பெண் இருவரும் மிகவும் பக்குவப்பட்டு இருக்கும்போதுதான் இறுதிவரை அழகிய நட்பாக வெற்றிகரமான நட்பாகத் தொடர்கிறது. ஆனால், அதற்கிடையில் ஆண்மீது பெண்ணுக்கும் அல்லது பெண்மீது ஆணுக்கும் ஒரு விதமான பொசசிவ்னஸ் ஏற்பட்டு விட்டுக்கொடுக்க முடியாத மனநிலை உண்டாகி, பிரிந்து இயங்க முடியாத நிலை உருவாகிறபோது அது காதலாக உருவெடுத்து பல்வேறு சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. பதின் பருவ மாணவர்கள் மாற்றுப் பாலின மாணவர்களுடன் நட்பு கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.‌

பொதுவாக இது போன்ற ஆண் பெண் நட்பு ஏற்படும் சூழ்நிலைகளைத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. இதனால் பின்னால் ஏற்படும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பின்னாட்களில் பெரும் சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கும் ஆண் பெண் நட்பு உருவாவதற்கு ஆழமான காரணங்கள் எதுவும் இருப்பதில்லை.‌ எளிமையான சில நிகழ்வுகளில் இருந்தே அந்த நட்புகள் தோன்றுகின்றன. தேர்வின்போது பேனா கொடுப்பது, பேருந்தில் டிக்கெட் எடுத்து உதவி செய்வது, பேருந்தைத் தவறவிட்ட மாணவிக்கு லிஃப்ட் கொடுப்பது என்பது போன்ற சிறு சிறு உதவிகளில் இந்த நட்பு தொடங்கி பெரிதாகிவிடுகிறது. ‘நன்றி’ என்ற இதயபூர்வமான வார்த்தையோடு இந்த உதவியை கடந்து சென்று விட வேண்டும். இந்த உதவிக்கெல்லாம்‌ காதலைப் பரிசாக அளிக்க வேண்டும் என்றால் நாம் கடைத்தேற முடியாது.

இன்றைய நட்பில் மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருப்பது போதைப் பழக்கங்களின் பரவல். நான்கைந்து மாணவர்களாக சேர்ந்து இருக்கும் போதுதான் தவறான விஷயங்களைப் பேசுகிறார்கள். மீடியா மூலமாக அவர்களுக்குத் தவறான விஷயங்கள் அறிமுகமாகின்றன. இந்த மாணவர் குழுவை குறிவைக்கும் சமூக விரோதக் கும்பல் அந்த குழுவில் ஒரு மாணவரை மூளைச்சலவை செய்து போதைப் பொருளை அறிமுகப்படுத்துகிறார்கள். இது பிறகு ஒவ்வொரு குழுவிற்கும் வேகமாகப் பரவி விடுகிறது. அழகிய நட்பு வட்டமாக இருந்த நண்பர்கள் குழு, சமூக விரோதக் கும்பலாக மாறிவிடுகிறது. எனவே நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட கெட்ட நண்பர்களை தேர்ந்தெடுக்காமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

நட்பிற்கென்று இலக்கணமோ, தகுதிகளோ தேவை இல்லை. ஒரே விதமான திறமை இருப்பவர்கள் இணைந்து நட்போடு இருக்கிறார்கள், எதிர்எதிர் திறமையும், கொள்கைகளும் இருப்பவர்கள்கூட இணைந்து இருக்கிறார்கள். (ராஜாஜியும் பெரியாரும் எதிர் எதிர் கொள்கைகள் கொண்டவர்கள் என்றாலும் கூட நண்பர்கள் என்ற உதாரணம் இங்கு பொருத்தமாக இருக்கும்) எனக்குச் சிறுவயதில் இவனைப் போலவே கிரிக்கெட் ஆடும் நண்பன் ஒருவன் இருந்தான், நன்றாகப் பாடும் நண்பன் ஒருவன் இருந்தான் என்றெல்லாம் வயதானவர்கள் பேசுவதை கேட்கிறோம். அப்படி எல்லாம் ஒரு நட்பு வாய்ப்பது என்பது அரிதானது. அப்படிப்பட்ட நண்பர்களை நாம் தான் தேடிச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில் பெற்றோர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். உங்கள் குழந்தைகளை நண்பர்களோடு சேர விடுங்கள். நண்பர்களோடு பேசுவதற்கும் விளையாடுவதற்கும் தடை போடாதீர்கள். உங்களிடம் பகிரமுடியாத சில விஷயங்களை நண்பர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ள முடியும். அது அந்த சமயத்தில் அவர்களைப் பெரிய ஆபத்திலிருந்து கூட காப்பாற்றும். எனவே யாருடனும் சேரக்கூடாது என்று எப்போதும் கட்டளையிடாதீர்கள்! ஆனால், அவர்கள் எப்படிப்பட்ட நண்பருடன் சேர்கிறார்கள், நண்பர்களுடன் என்ன பேசுகிறார்கள், என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருந்துவிடாதீர்கள்.‌ ஏனென்றால், ஒருவனின் தலையெழுத்து அவனுடைய நண்பர்களாலேயே எழுதப்படுகிறது. நல்ல நண்பர்கள் என்பவர்கள் வெற்றியில் ஏற்றிவிடும் ஏணிகள்! திசை தெரியாத கடலில் கரை சேர்க்கும் தோணிகள்.

நட்பிற்கென்று இலக்கணமோ, தகுதிகளோ தேவை இல்லை.
ஒரே விதமான திறமை இருப்பவர்கள் இணைந்து நட்போடு இருக்கிறார்கள், எதிர் எதிர் திறமையும், கொள்கைகளும் இருப்பவர்கள் கூட இணைந்து இருக்கிறார்கள்.

Related posts

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி

ஆந்திராவில் மதுபானம் விலை அதிரடி குறைப்பு; ரூ120க்கு விற்கப்பட்ட மது ரூ99க்கு விற்பனை

நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை