சின்னமம்மி டெல்டா வரும்போது கூட்டத்தை காட்ட தேனிக்காரர் போட்ட உத்தரவு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காசு பார்க்கும் துறையை கேட்டு புல்லட்சாமி அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறாராமே முறைகேடு புகாரில் சிக்கியதால் தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரி..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி கலால்துறை ஆணையராக இருந்த அதிகாரி, கூடுதலாக ஸ்மார்ட் சிட்டி இணை செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தாரு.. அப்புறம், ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு செய்ததாக இவரையும், முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி நிதித்துறை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரியையும் மக்கள் தொடர்பு இல்லாத பணிக்கு அப்போதைய தலைமை செயலர் அதிரடியாக இடமாற்றம் செய்துவிட்டார்.

ஆனால், மக்களவை தேர்தலுக்கு முன்னாடி அந்த தலைமை செயலாளரை சண்டிகருக்கு டிரான்ஸ்பர் செய்துட்டாங்க.. அதன்பிறகு புல்லட்சாமியை சந்தித்து மக்கள் தொடர்பு உள்ள துறைக்கு இடமாற்றம் செய்யணும்னு கேட்டாராம் நிதித்துறை செயலாளர். மேலும் புதிதாக வந்த தலைமை செயலாளரையும் சந்திச்சு.. ஐஏஎஸ் அதிகாரியின் பிரச்னை குறித்தும் விளக்கினாராம்.. தொடர்ந்து, வேளாண் மற்றும் சுகாதாரத்துறை செயலராக அவர் நியமனம் செய்யப்பட்டாரு..

இதை அறிந்த மாநில அதிகாரியான மாஜி கலால்துறை அதிகாரி தினமும் புல்லட்சாமியை சந்தித்து மக்கள் சார்ந்த பணிக்கு தன்னை மாற்றணும்னு கோரிக்கை வைக்கிறாராம்.. இந்த துறைக்கு மாறினால் காசு பார்க்கலாம், அரசு காரில் ஒய்யாரமா வலம் வரலாம்னு அவர் கணக்கு போடுகிறாராம்.. விரைவில் அவரது கனவை புல்லட்சாமி நிறைவேற்றுவாருன்னு சட்டசபை வட்டாரத்தில் அரசல்புரசலா தகவல் பரவிக்கிட்டு இருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் இலை கட்சி முக்கிய நிர்வாகிகளை கண்காணிக்க சேலத்துக்காரர் அதிரடி உத்தரவு போட்ட விஷயம் தெரியுமா..’’ என அடுத்த கேள்விக்கு போனார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில் சின்னமம்மி, தேனிக்காரர் ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என அந்த கட்சியின் மாஜி அமைச்சர்கள் சேலத்துக்காரரிடம் வலியுறுத்தி வர்றாங்களாம்.. ஆனால், சேலத்துக்காரர் அந்த 2 பேரையும் கட்சியில் சேர்க்க முடியாதுன்னு அவர்களிடம் கறாராக கூறி விட்டாராம்… ஆனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சின்னமம்மி மற்றும் தேனிக்காரருக்கு ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் சேலத்துக்காரருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டிருக்காம்…

இதனால் நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கையை ரகசியமாக கண்காணிக்க சேலத்துக்காரர் தனது சிலிப்பர் செல்களுக்கு ரகசிய உத்தரவிட்டுள்ளாராம்… அவங்களும் ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாங்களாம்.. இதனால் விரைவில் டெல்டாவில் இலை கட்சியில் அதிரடி மாற்றம் இருக்க வாய்ப்பு இருக்குது என அரசல் புரசலாக பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரத்தில் தப்பிய பெண் அதிகாரி ஒருத்தர் வாரி சுருட்டுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததில் சர்வேயர் மற்றும் துணை தாசில்தார்கள் சர்ச்சைக்கு உள்ளாகி, சமீபத்தில் ஒரு சர்வேயர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டாங்க.. ஆனால் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் துணை தாசில்தார் மட்டும் தப்பிச்சிட்டாராம்.. பட்டா மாற்றம் செய்ததில் இவருக்கு பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளதாம்.. இருப்பினும் இவர் தப்பிவிட்டாராம்.. காரணம், இவருக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முக்கிய தாசில்தார் துணை நிற்கிறாராம்.. இவர், இலைக்கட்சி மாஜி அமைச்சர் ஒருவரின் தீவிர விசுவாசியும்கூடவாம்..

இருப்பினும், கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கிட்டு இருக்கிறாராம்.. இவர் சொல்வதைத்தான் மேலதிகாரிகளும் கேட்கிறார்களாம்.. இவரை கேட்டுத்தான் சஸ்பெண்ட் நடவடிக்கை மற்றும் மாற்றம் செய்யும் நடவடிக்கையே நடக்குதாம்.. இவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வருவாய் துறையை கலக்கிட்டு வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆன்லைன்ல விண்ணப்பித்தாலும் புரோக்கர்ஸ் கிட்ட போனாத்தான் உடனே வேலை நடக்குதுன்னு ஜனங்க குமுறல் சத்தம் கேட்குதாமே..’’ என்னவாம் என்றார் பீட்டர் மாமா.

‘‘பல்வேறு அரசு நலத்திட்டங்கள், சான்றிதழ்கள் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும், வெயிலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் முன்பு புரோக்கர்கள் நடமாட்டம் சகஜமாக உள்ளதாக அரசு அலுவலர்களே புகார் வாசிக்கிறாங்க.. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தாமதமாகும் நிலையில் பல ஆயிரங்களை கொடுத்தா, வேண்டிய சான்று அடுத்த சில நாட்கள்ல கிடைச்சுடுதாம்..

இதனால வசதியானவங்க புரோக்கர்ஸ் கிட்ட போயி வேலைய முடிச்சிக்கிட்டு போயிடுறாங்க.. ஆனா, ஏழை கூலிகள் என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சு வர்றாங்களாம்.. இதனால, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க இதை கவனிச்சு நடவடிக்ைக எடுக்கணும்னு வெயிலூர் மா நகர் ஆட்சியிலயும், வெயிலூர் வட்ட ஆட்சி அலுவலகத்துக்கு போற ஜனங்களோட புகார் குரலாக ஒலிக்கத்தொடங்கியிருக்குது.. அதோடு இந்த ஆபிஸ்கள்ல இருக்குற சில அதிகாரிகளோட புகாராகவும் ஒலிக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவுக்கு வரும் சின்ன மம்மிக்கு அதிக கூட்டத்தை காண்பிக்க வைத்திக்கு தேனிக்காரர் உத்தரவு போட்டிருக்கிறாரமே..’’ என கடைசி கேள்வியை கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சின்னமம்மி வரும் 17ம் தேதி மக்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சியை தொடங்கு உள்ளாராம்.. இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துக்கிட்டு வருதாம்.. இந்நிலையில், டெல்டாவிற்கு சின்னமம்மி வரும் போது, அவருக்கு ஆதரவாக அதிகளவு கூட்டத்தை கூட்ட வேண்டும்னு தேனிக்காரர் வைத்தியானவருக்கு உத்தரவிட்டுள்ளாராம்..

தொடர்ந்து, நெற்களஞ்சியம், மனுநீதிசோழன் உள்ளிட்ட டெல்டாவில் தனது ஆதரவாளர்களிடம் பேச வைத்தியானவர் முடிவு செய்துள்ளாராம்.. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.. சின்னமம்மி டெல்டாவுக்கு வரும் போது, அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டத்தை கூட்டி காண்பிக்க வேண்டும்னு முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. இதற்காக, விட்டமின் ‘ப’ அள்ளி வீச முடிவு செய்துள்ளார்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

அதிகரிக்கும் அதிருப்தி… உட்கட்சி பூசலால் திணறும் ஹரியானா பாஜக; சமாதான முயற்சி தோல்வி

தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு – ஐகோர்ட் உத்தரவு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வலியுறுத்தல்