குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை: காதலன் மீது பெற்றோர் புகார்

பல்லாவரம்: பல்லாவரம், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா. மகள் ஹேமிதா (19), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், 9ம் வகுப்பு படிக்கும்போது, அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டர் மாஸ்டர் அஜய் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த ஹேமிதாவை கண்டித்துள்ளனர். அதன்பிறகு ஒரு சில மாதங்களாக காதலர்கள் இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டனர். இந்நிலையில் ஹேமிதா, பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்றபோது, மீண்டும் டியூஷன் மாஸ்டர் அஜயுடன் காதலை தொடர்ந்துள்ளார். இதுபற்றி அறிந்த பெற்றோர் மீண்டும் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி அதிகாலை ஹேமிதா வீட்டில் இருந்து மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஹேமிதாவை தேடி வந்தனர். அப்போது குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக பல்லாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், அங்கு சென்று பார்த்தபோது, அது ஹேமிதாவின் உடல் என்று தெரியவந்தது. இதையடுத்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டைவிட்டு வெளியேறிய ஹேமிதா, குரோம்பேட்டை ரயில் நிலையம் சென்று, அங்கு தண்டவாளத்தில் இறங்கி நின்றுள்ளார். அப்போது, திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்ற அதிவிரைவு ரயில் ஹேமிதா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே, ஹேமிதாவின் பெற்றோர், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அஜய் பேச்சைகேட்டு தான் ஹேமிதா வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், மகள் மட்டும் தற்கொலை செய்ததை பார்த்த அஜய், அங்கிருந்து நைசாக சென்று விட்டார். மகளின் இறப்பிற்கு காரணமான அஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார், அஜயை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related posts

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு