கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*வனத்துறையினர் கண்காணிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கு நேற்று, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்தஅழியார் அருகே உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த ஜூன் மாதம் மாதம் துவங்கி தென்மேற்கு பருவ மழையும்,அதன்பின் வடகிழக்கு பருவமழையும் என சில மாதமாக தொடர்ந்து பெய்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதனால், கடந்த சில மாதமாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்துள்ளது.

இந்த மாதத்தில் கடந்த இரண்டு வாரமாக மழை குறைவாக இருந்தாலும், அருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டுகிறது.இந்த ஆண்டில் 23ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கவியருவிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதில் நேற்று,கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால், கவியருவிக்கு வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.அங்கு வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், நேரம் செல்ல செல்ல அருவியில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க பகுதி, பகுதியாக சுற்றுலா பயணிகளை குளிக்க அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் பலரும் வெகுநேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், அடர்ந்த வனத்திற்குள் விதி மீறி செல்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அது போல் நேற்று, கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஆழியார் அணைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதன் காரணமாக போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!