கிறிஸ்தவர், இஸ்லாமியர்களுக்கு கல்லறைத்தோட்டம், அடக்கஸ்தலம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

பேரவையில் கேள்வி நேரத்தின் போது பெரியகுளம் கே.எஸ்.சரவணகுமார்(திமுக): பெரியகுளத்தில் இஸ்லாமியர்களுக்கு அடக்கஸ்தலம் அமைக்க அரசு ஆவண செய்யுமா?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்: திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியர்களின் பரிசீலனை அடிப்படையில் தனியார் பங்களிப்பில் அடக்கஸ்தலம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி 9ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு கல்லறைத்தோட்டம், அடக்கஸ்தலம் அமைக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார். பெரியகுளம் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு அடக்கஸ்தலம் அரசு புறம்போக்கு நிலத்திலோ அல்லது தனியார் பங்களிப்பு நிலத்திலோ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை: – அமைச்சர் மெய்யநாதன் உறுதி
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் பேசுகையில், “திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்தை பசுமைப் பல்கலைக்கழகமாக மாற்றும் வகையில் மரக்கன்றுகள் நட வேண்டும்” என்றார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பசுமை பள்ளி எனும் திட்டத்தை முதல்வர் 2021-22ல் தொடங்கி ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மூலிகைத் தோட்டம், சோலார் மூலம் மின்சாரம், காய்கறி தோட்டம், நெகிழியற்ற வளாகம், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் ரூ.50 கோடியில் 100 பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நட அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

* 2500 பள்ளி கட்டிடங்களுக்கு அரசு ரூ.190 கோடி ஒதுக்கீடு: – அமைச்சர் ஐ.பெரியசாமி
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் ஜி.கே.மணி(பாமக) பேசுகையில், “தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளது. வகுப்பறை இல்லாத இடங்களில் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை இருக்கிறது. இது குறித்து பள்ளிக்கல்வி துறையிடம் விரிவான பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. கழிப்பறைகள் கட்டுவது, சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளையும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில்,” பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் 2500 பள்ளி கட்டிடங்களுக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2300 பள்ளிகளில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பென்னாகரம் தொகுதி பள்ளி கட்டிடங்கள் குறித்து மீண்டும் ஆய்வு செய்து புதிதாக கட்டவேண்டிய பள்ளி கட்டிடங்களை கட்டித்தரவும், புதுப்பிக்க வேண்டிய பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது