சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

சோழிங்கநல்லூர்: சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது கோயம்பேடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, பட்ரோடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இயங்கி வரும் மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் முக்கிய ரயில் நிலையங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்சில் கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லுவோர் என பல தரப்பு மக்களும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வரும் ஏராளமான வசதிகளாலும், பாதுகாப்பு காரணங்களாலும் மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியும். இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்களின் வாகனங்களை அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி செல்கின்றனர். ஆனால், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் போதுமான இட வசதி இல்லாததால் வாகனங்களை நிறுத்துவதில் நெரிசல் ஏற்படுகிறது.  குறிப்பாக சைதாப்பேட்டை, விமான நிலையம் மெட்ரோ பார்க்கிங், ஆலந்தூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட ரயில் நிலையங்களல் காலையிலேயே மெட்ரோ பார்க்கிங் நிரம்பி வழிகிறது.

இதனால் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில் 120க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த கூடுதல் இடங்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் பயணிகள் அவர்களது வாகனங்களை நிறுத்த ஏற்படும் இடப்பற்றாக்குறைக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் இடங்களை வாங்கி வருகிறோம். மேலும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களுக்கு நெரிசல் ஏற்படாத வகையில் கூடுதல் நிலங்களை தேர்வு செய்து வருகிறோம். அந்த வகையில் கோயம்பேடு, பூந்தமல்லி, பைபாஸ், சோழிங்கநல்லூர், போரூர், திருமங்கலம், பட்ரோடு, சிறுசேரி உள்ளிட்ட இடங்களில் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்து இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது,’’ என்றனர்.

* தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களில் 120க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த கூடுதல் இடங்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை