சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரிக்கை

சோழவந்தான்: சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான்- வாடிப்பட்டி சாலையில் இருந்த ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.48.86 கோடியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி துவங்கியது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டு நீண்ட இழுபறியாக நடைபெற்ற பணி, திமுக ஆட்சி அமைந்த பின் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் போக்குவரத்து துவங்கியது.

இப்பணி துவங்கிய போதே உரிய திட்டமிடல் இல்லாமல், நிலஆர்ஜிதம் செய்வதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. பாலம் கட்டுவதில் உள்ள குறைகளை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சுட்டிக் காட்டினாலும் அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. இதன் விளைவு தற்போது பாலம் திறக்கப்பட்டாலும் உரிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சோழவந்தான் குணசேகரன் கூறுகையில், ‘இப்பாலம் வாடிப்பட்டி சாலையில் வடபகுதியில் ஆரம்பித்து பல வளைவுகளுடன் பேருந்து நிலையம் அருகில் மேற்கு பகுதியில் முடிகிறது. பாலத்தின் இருபுறமும் இரு சர்வீஸ் சாலைகள், இரு தெரு சாலைகள், பாலம் வழிச்சாலை என 5 சாலைகள் இணைகின்றன. இதனால் அதி வேகமாக வரும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும் பாலத்தில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதுடன், பாலத்தில் ஓட்டை விழும் அபாயமும் உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பாலத்தின் இருபுறமும் பள்ளிகள் உள்ளதால் வேகத்தடை அமைப்பதோடு சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும்’ என்றார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 15 பேர் மீது குண்டாஸ்!

லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை அளிக்க ஆணை

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்