சித்தூர் மாநகராட்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க வேண்டும்

*ஆணையர் அருணா உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாநகராட்சியில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என ஆணையர் அருணா கூறினார்.
சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன், ஆணையர் அருணா ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: பருவகால நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொறியியல் அலுவலர்கள் மற்றும் அமைச்சு செயலர்கள் மாநகரில் குடிநீர் விநியோகத்தின் தரம், கசிவைத் தடுத்தல், நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு உள்ளிட்ட பணிகள் குறித்து நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கலவ குண்ட அணையில் இருந்து சித்தூர் மாநகரத்திற்கு வரும் குடிநீரை, தூய்மை செய்யும் சுத்திகரிப்பு மையத்தில் தரமாக உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் பருவகால நோய்களை கட்டுப்படுத்த குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்குவது அவசியம்.தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளை கிணறு நீர் மற்றும் என்டிஆர் நீர்த்தேக்கத்தின் நீரின் தரத்தை தினமும் கண்காணிக்க வேண்டும்.

மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் மையங்கள், உரிமம் பெற்று முறையாக புதுப்பு சான்று உள்ளதா? என சரிபார்த்து, சுத்தமான தண்ணீரில் ரசாயன கூறு, இ.கோலி பாக்டீரியா, பி.எச். போன்ற பரிசோதனைகள் நடத்த வேண்டும். குடிநீர் விநியோகம் குறித்த பரிந்துரைக்கப்பட்ட அறிக்கைகளை தினமும் மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் 50 வார்டுகளில் எந்த ஒரு பகுதியிலும் பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்னை இல்லாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மோட்டார்கள், குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீர் செய்து பொதுமக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாநகராட்சி பொறியியல் துறை அதிகாரி கோமதி, இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி வடிகால் வாரிய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு